மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 17 மே 2018

பழனி சிலை: அறநிலையத் துறை ஆணையர் தலைமறைவு!

பழனி சிலை: அறநிலையத் துறை ஆணையர் தலைமறைவு!

பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டுவந்த இந்து சமய முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இரண்டு முறை சமன் அனுப்பியும் தனபால் ஆஜராகவில்லை.

பழனி முருகன் கோயிலில் உள்ள சிலையில் முறைகேடு நடந்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் 2004ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய உற்சவர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டுச் சிலை செய்து வைத்தனர். புதியதாகச் செய்யப்பட்ட உற்சவர் சிலை சில நாள்களிலேயே கறுத்துப் போனதால், கோயிலில் பூட்டிய இருட்டறையில் 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டது. இதைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்தச் சிலை மோசடியில் தொடர்புடைய முத்தையா ஸ்தபதியையும், பழனி பால தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவரையும் கடந்த மார்ச் 25ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சிலை மோசடி வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நான்காம்கட்ட விசாரணையை மேற்கொண்ட ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் பழனி கோயில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும் இந்துசமய அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகிய இருவரையும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்தச் சிலை விவகாரம் தொடர்பாக, சிலை தயாரிப்பு பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத் துறை ஆணையர் தனபால் மற்றும் உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் முடிவு செய்திருந்தனர்.

அதைதொடர்ந்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தனபாலிடம் விசாரணை நடத்த இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் இரண்டு முறையும் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். அதனால் தனபாலின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon