மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 17 மே 2018

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் பிரியாணி!

கோடைக்காலத்தின் உச்சபட்ச நிலையான அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு. கூடவே, இந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும் தொடர்கின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்து உடல் உஷ்ணம், சோர்வு, நாவறட்சி போன்ற அசௌகரியங்களைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டால், இந்த அக்னி நட்சத்திரமும் இனிய பருவ காலம்தான். அதற்காக உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சி தரும் தேங்காய்ப்பால் பிரியாணி செய்யலாம் வாங்க.

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப்பால் – 2 கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் – அரை கப், பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), அன்னாசிப்பூ – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், பிரியாணி இலை – ஒன்று, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியைக் கழுவி 10, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, அரிசியைச் சேர்த்து ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

மீதமுள்ள நெய்யைக் குக்கரில் விட்டுச் சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, முந்திரி சேர்த்து வறுத்து நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, பிறகு நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும்.

பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து, கொதிக்க ஆரம்பித்த உடன் உப்பும் அரிசியும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கிவிட்டு அடுப்பின் தீயைக் குறைத்து, வெயிட் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, கிளறிப் பரிமாறவும்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது