மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

நிர்மலா விவகாரம்: சிபிஐ விசாரணை கிடையாது!

நிர்மலா விவகாரம்: சிபிஐ விசாரணை கிடையாது!

நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் உதவிப் பேராசிரியர் முருகனையும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்க அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த மனுவானது இன்று (மே 16) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும்போது, அதில் தலையிட முடியாது என்று கூறி சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். நிர்மலா தேவி, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய சந்தானம் நேற்று முன்தினம் ஆளுநரிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon