மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

விஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி!

விஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி!

சென்னை, பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று (மே15) நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிதியைக் கொண்டும் மற்ற சங்கங்களின் நன்கொடையைக் கொண்டும் சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பையனூரில் 6 கோடி செலவில் 10,000 சதுர அடி நிலப்பரப்பில் படப்படிப்புத் தளம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். பெஃப்சியின் முன்னாள் நிர்வாகி வி.சி.குகநாதன் அவர்கள் ஆசைப்பட்டது போல, பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைத்துத் தரவும் திட்டமிட்டுள்ளோம்.

அதன் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் 640 குடியிருப்புகள் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒவ்வொரு பிளாக்கிற்கும் 80 குடியிருப்புகள் வீதம் 8 பிளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். அதில் முதல் பிளாக்கிற்கு விஜய் சேதுபதி உதவியதால் அவர் பெயரும், இரண்டாவது பிளாக்கிற்கு சிவகார்த்திகேயன் உதவியதால் அவர் பெயரும் வைக்கப்போகிறோம்.

100 ஆண்டு தாண்டியும் நிற்கக்கூடிய இந்தக் கட்டிடத்துக்கு உதவ யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இந்தியாவிலே பெரிய படப்பிடிப்புத் தளமாக இது இருக்கும். இதைத் திரைப்பட நகரமாக உருவாக்க முயற்சிகள் செய்துவருகிறோம். தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கும் படங்களை வெளியில் சென்று எடுப்பதைவிட இங்கேயே எடுத்தால் இங்கே இருக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.

மேலும், “பெஃப்சி அமைப்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அடகு வைத்துவிட்டது போல பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெஃப்சிக்கும் நல்லுறவு நிலவுகிறது” என்றும் ஆர்.கே.செல்வமணி கூறினார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon