மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

அமித் ஷாவின் எறும்பு வியூகம்!

அமித் ஷாவின் எறும்பு வியூகம்!

ஆரா

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று கர்நாடகத் தேர்தல் முடிவைப் பார்த்து பாஜகவினர் தங்களுக்குள் புலம்பிவருகின்றனர். தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க முயற்சித்துவருகையில், பாஜக மாநிலத்தில் 104 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக நிற்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் எட்டு இடங்களே தேவையான நிலையில் அதைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி.

இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி என்று பாஜகவில் பலரும் பாராட்டினாலும், ஆனால் இந்த தேர்தல் ஷோவின் இயக்குனர் பாஜகவின் தேசியத் தலைவரான அமித் ஷாதான். அவரது வழக்கமான, ‘மைக்ரோ மேனேஜ்மெண்ட்’ கள வியூகம்தான் பாஜகவுக்கு இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் தேர்தல் பணியாற்றிய பாஜக பிரமுகர்கள். அவர்களில் பலரிடம் பேசியபோது களத்தில் அமித் ஷாவின் வியூகம் என்னவென்று தெரியவந்தது. பாஜகவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் மாற்றுக் கட்சியினரும்கூட இந்த கள வியூகங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

டார்கெட் 90 டேஸ்

தேர்தல் மே மாதம் என்பதை துல்லியமாக ‘அறிந்து வைத்திருந்த’ அமித் ஷா கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக வகுத்த முதல் திட்டம்தான், ‘டார்கெட் 90 டேஸ்’. அதாவது குறுவைப் பயிர் போல தேர்தல் அறுவடைக்கான 90 நாட்கள் திட்டம்.

இதில் முதல் 45 நாட்களுக்குள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் சொந்தத் தொழில், குடும்ப வேலைகள் ஆகியவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்த 45 நாட்கள் அவர்கள் தங்களது ஒரு நாளின் 24 மணி நேரத்தையும் கட்சிக்காகவே கொடுக்க வேண்டும். முழுக்க முழுக்க 45 நாட்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கட்சிக்காகவே செலவழிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த ஊரில், சொந்தப் பகுதியில்தான் இருப்பார்கள். ஆனால் வீட்டுக்குப் போகக் கூடாது.

ஒரு பூத் 25 யூத்

பாஜக களத்தில் வகுத்த அடுத்த வியூகம் இது. மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் நமக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று விசாரிப்பார்கள். ஆனால் ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷாவோ, ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் இந்தத் தொகுதியில் நாம் எத்தனை பூத்கள் வெல்ல முடியும் என்றுதான் நிர்வாகிகளிடம் விசாரிப்பார். மைக்ரோ மேனேஜ்மென்ட் எனப்படும் இந்தக் குறு மேலாண்மைதான் பாஜகவை 104 தொகுதிகளுக்குத் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.

ஒவ்வொரு பூத்துக்கும் 25 இளைஞர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த 25 பேர் கொண்ட குழுவில் பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த டீம் அந்த பூத்தில் உள்ள அதிகபட்சம் ஆயிரம் வாக்காளர்களை தினமும் காலை மாலை சென்று சந்தித்து வர வேண்டும். அவர்களது வாட்ஸ் அப் எண்களை வாங்க வேண்டும். இந்த வேலை 90 நாட்களின் முதல் பதினைந்து நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த வாட்ஸ் அப் எண்கள் அந்த பூத் டீமால் ஏற்படுத்தப்படும் வாட்ஸ் அப் க்ரூப்களில் சேர்க்கப்பட்டன.

போனுக்குள்தான் இனி தேர்தல்!

ஆறு மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த பாஜக தேசிய இளைஞர் அணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள், “நெக்ஸ்ட் எலக்ஷன் வில் பி ஃபாட் த்ரூ ஒன்லி ஃபோன்” என்பதுதான்.

அதாவது அடுத்து வரும் தேர்தல் எல்லாம், செல்போனுக்குள் இருப்பவர்களுக்குள் செல்போனுக்குள் இருப்பவர்கள் மூலமாகவே நடைபெறும் என்று பேசினார் பிரதமர் மோடி. இன்றைய உலகம் என்பது ஸ்மார்ட் போனுக்குள் இருக்கிறது. எனவே அனைவரையும் ஸ்மார்ட் போனுக்குள் கொண்டுவாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி. அதை இந்தத் தேர்தலில் செயல்படுத்திக் காட்டினார் அமித் ஷா.

ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் 25 இளைஞர்கள் கொண்ட குழு தங்கள் பூத்துக்காக மட்டும் 25 முதல் 100 வாட்ஸ் அப் க்ரூப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த வாட்ஸ் அப் குரூப்புகளின் அட்மின்களான அந்த 25 பேரும் தங்களுக்கு வருகிற செய்திகளை தினந்தோறும் தங்கள் குரூப்புகளுக்கு ஃபார்வர்டு செய்ய வேண்டும். இதற்கான செயல் திட்டமும் முதல் 45 நாட்களில் உருவாக்கப்பட்டுவிட்டது.

மண்டல, மாவட்ட, உள்ளூர் பிரச்சினைகள்!

பாஜக கர்நாடக மாநிலத்துக்கு என்று தனியாக ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்தாலும் கர்நாடகத்தைத் தெற்கு கர்நாடகா, மராட்டியத்தை ஒட்டிய பகுதியான மும்பை கர்நாடகா, வடக்கு கர்நாடகா, கடற்கரை கர்நாடகா என்று பல மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனித் தேர்தல் அறிக்கை தயாரித்தனர். ஏனெனில் ஒவ்வொரு மண்டலமும் தங்களுக்கென்று பிரத்யேக பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு மண்டல தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

இந்த மண்டல பிரச்சினைகளை மையமாக வைத்து செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல மையத்திடமிருந்தும் அந்தந்த வாட்ஸ் அப் க்ரூப் அட்மின்களுக்குச் செல்லும். அதை அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பிப் பரப்ப வேண்டும்.

தலையை அடிக்காதே வாலை அடி

குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட, ஒன்றிய காங்கிரஸ்காரர்களின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்ன, கடந்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் சொத்து மதிப்பு என்ன என்பது பற்றிய தெளிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட, ஒன்றிய வாட்ஸ் அப் க்ரூப்புகளுக்கு அனுப்பப்பட்டது. “மிகப் பெரிய தலைவர்களைதான் விமர்சிக்க வேண்டும் என்பது இல்லை. உன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” என்பதுதான் அமித் ஷாவின் உத்தரவு. இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது என்பதற்குக் கடற்கரையோர கர்நாடகாவில் பாஜகவுக்குக் கிடைத்த பெரும் வாக்குகளே சாட்சி.

இது தவிர ராகுல் முதல் சித்தராமையா வரையிலான தனிநபர் தாக்குதல் வீடியோக்களும் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுப் பரப்பப்பட்டன.

உள்கட்சி பிரச்சினை காலி!

எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலும் அவர் மேல் பல பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். மேலும் எடியூரப்பாவுடன் தனிக்கட்சியாக சென்றுவிட்டு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பிய நிர்வாகிகள் உள்ளூர் பாஜக நிர்வாகிகளால் மதிக்கப்படவில்லை. மக்களைச் சந்திப்பதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அமித் ஷா இட்ட கட்டளை அந்த அதிருப்தி நிர்வாகிகளைச் சரிப்படுத்த வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட உள்ளூர் தலைவர்களைச் சந்தித்து மாநில அளவிலான குழுவினர் பேசி அவர்களது அதிருப்தியை நிவர்த்தி செய்திருக்கிறார்கள். தான் தேசியத் தலைவர் என்ற உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஒரு கோட்டுக்குள் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், தேவைப்பட்டால் அதிருப்தியில் இருந்த சில தலைவர்களுடன் தானே போனில் பேசி பல போட்டி வேட்பாளர்களை முளையிலேயே ‘ஆஃப்’ செய்திருக்கிறார் அமித் ஷா.

பைக் ராலி

ஒரு பூத் என்றால் சுமாராக 700 முதல் ஆயிரத்தைத் தாண்டிய வாக்காளர்கள் இருப்பார்கள். இவர்களை தினமும் சந்திப்பதற்காக பைக் ராலி என்ற திட்டம் இரண்டாவது 45 நாட்களுக்கும் செயல்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பூத்திலும் பைக் ரேலிக்காக ஒரு குழு தயார் செய்யப்பட்டது. அதிலுள்ள ஒவ்வொரு டூ வீலருக்கும் ஒரு நாளைக்கு பெட்ரோல் போட 100 ரூபாய் தரப்படும். அந்தக் குழு மோட்டார் பைக்குகளில் தங்களில் பூத்துக்குள்ளே சுற்றி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் இந்த பைக் ராலி நடக்கும்.

காலையில் பாஜக கொடிகட்டிய பைக்குகளில் செல்லும் இளைஞர்கள் அந்தந்தப் பகுதியின் பிரச்சினைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பூத்திலுள்ள அனைவருக்கும் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள். மாலையில் மீண்டும் அதே பகுதிகளுக்குச் சென்று வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பது குறித்து பூத் மக்களிடம் பேசுவார்கள். இவ்வாறு கடந்த 45 நாட்களும் பாஜகவினர் மக்களோடு இருந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு எறும்பும்...

“உன் பூத்தில் ஊர்ந்து போகும் ஒவ்வொரு எறும்பையும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு பூத் தை சூம் செய்து பார்க்க வேண்டும்” என்பதுதான் அமித் ஷா கட்சி நிர்வாகிகளுக்கு இட்ட கட்டளை. அந்த எறும்பு வியூகத்தின் பலனாகத்தான் பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்றுத் தனிப் பெரும் கட்சியாக மாறியிருக்கிறது.கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்துக்கு முன்பாக வன்முறைச் சம்பவங்கள் பெரிதாக எதுவும் நடக்காத நிலையில் அமித் ஷாவின் இந்த எறும்பு வியூகம் பாஜகவுக்குப் பெரும் பலத்தைக் கொடுத்திருக்கிறது.

பெரும்பான்மை கிடைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்பட்டாலும், கடந்த 90 நாட்களில் நாம் மக்களோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு அறுந்துவிடக் கூடாது. இது மக்களவைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே பாஜக தலைமையின் உத்தரவு. எனவே அமித் ஷாவின் எறும்பு வியூகம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பாஜகவுக்கு உதவும் என்கிறார்கள் அமித் ஷாவின் கட்டளைப்படி கர்நாடகத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்த பாஜக நிர்வாகிகள்!

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon