மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

தெலுங்கு ரீமேக்கில் விஷால்

தெலுங்கு ரீமேக்கில் விஷால்

சண்டக்கோழி-2 திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படத்தில் தான் நடிக்கவிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், அரசியல் என்ட்ரீ என செம பிஸியாக இருந்தாலும் நடிப்பிலும் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஷால். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் வில்லன் எனும் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருப்பதே அதற்குச் சாட்சி.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்திலும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் அவரது கலையுலக குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து அவர் நடித்திருந்த ‘இரும்புத்திரை’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். தகவல் திருட்டை மையமாக வைத்து, இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நடித்துவரும் சண்டக்கோழி-2 படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் அவர் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தைப் பற்றிய ஓர் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. ஆம். இந்த முறை அவர் கையிலெடுத்திருப்பது ஒரு தெலுங்கு படம்.

தெலுங்கில், பூரி ஜெகன்நாத் இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த படம் ‘டெம்பர்’. 2015இல் ரிலீஸான இந்தப் படத்தில் போலீஸாக நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். ‘அயோக்யா’ என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படவிருக்கும் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் விஷால். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் அசோஸியேட்டான வெங்கட் மோகன் இயக்க, லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon