மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 15 மே 2018

முன்னணியில் பாஜக: பெரும்பான்மையைத் தொடுமா?

முன்னணியில் பாஜக: பெரும்பான்மையைத் தொடுமா?

தென்னிந்தியாவின் நுழைவாயிலாகத் தான் கருதிய கர்நாடகாவில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது பாஜக. தொங்கு சட்டமன்றம்தான் அமையும் என்ற பல கருத்துக் கணிப்புகளை உடைத்துத் தனிப்பெரும் கட்சியாக வென்று பெரும்பான்மையை எட்டிப் பிடிக்கத் தொட்டுக்கொண்டிருக்கிறது பாஜக.

கடந்த 12 ஆம் தேதி நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 15) காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலை ஒன்பது மணி வாக்கில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கிய நிலையில், பாஜக தனிப் பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆர்.ஆர்.நகர், ஜயநகர் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர 222 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று காலை 8 மணி வாக்கில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரத்துக்கு தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை நடந்தது. தபால் ஓட்டுகளில் காங்கிரஸும், பாஜகவும் இடையே கடுமையான போட்டியில் இருந்தன. தபால் ஓட்டுகள் என்று குறிப்பிடாமல் மின்னணு ஊடகங்களில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான போட்டி நிலவுகிறது என்று செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் ஒன்பது மணிக்கு மேல் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை முடிந்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் களம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. பாஜக மளமளவென பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

தோல்வியைத் தழுவிய சித்தராமையா

முதல்வராக இருந்த சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியையே முக்கியமாகக் கருதினார். இந்நிலையில் சித்தாராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் சிடி தேவகவுடாவிடம் தோல்வி அடைந்திருக்கிறார். இது காங்கிரசைக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதே நேரம் அவர் போட்டியிட இன்னொரு தொகுதியான பாதாமி தொகுதியில் முன்னணியில் இருந்தார் சித்தாராமையா.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தாராமையாவை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற கட்சியின் வேட்பாளர் சிடி தேவகவுடா, “சித்தராமையா மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரது அணுகுமுறையும், அனாவசியமான பேச்சுகளுமே அவரைத் தோற்கடித்துள்ளன’’ என்கிறார் சிடி தேவ கவுடா. தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சித்தராமையா இன்று பகல் ஆளுநரைச் சந்திக்கிறார்.

வெற்றி முகத்தில் எடியூரப்பா

பாஜகவின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட எடியூரப்பா தான் போட்டியிட்ட ஷிமோகா மாவட்டத்திலுள்ள சிகர்புரா தொகுதியில் வசதியாக முன்னணியில் இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுவருவதை ஒட்டி இன்று மாலை எடியூரப்பா டெல்லி செல்கிறார்.

பிற்பகல் நிலவரம்

இன்று பிற்பகல் 12.45 நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. 9 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் இது தவிர 75க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 64 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் பாஜக பெரும்பான்மை இலக்கமான 112-ஐ எட்டிவிடும் சாத்தியத்துக்கு மிக அருகே இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சுமார் எழுபது இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அதற்கு ஆட்சி அமைக்க வெகு சில இடங்கள் தேவை என்பதே இப்போதைய நிலைமை. அதை அடைவதில் பாஜகவுக்குப் பெரிய அளவு சிரமம் இருக்காது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon