மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 15 மே 2018

பிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை!

பிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை!

சிறுவன் பிரதியுமான் கொலை வழக்கில் ஜூலை 4ஆம் தேதி விசாரணை தொடங்கவுள்ளதாக குருகிராம் நீதிமன்றம் நேற்று (மே 14) தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற ஏழு வயது சிறுவன் 2016 செப்டம்பர் 8 அன்று பள்ளிக் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முதலில் பள்ளிப் பேருந்து நடத்துநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பேருந்து நடத்துநருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போலு என்பவர்தான் (நீதிமன்ற அறிவுரைப்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரதியுமானைக் கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. போலுவுக்கு எதிராக சிபிஐ கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜஸ்விர் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றரை மாதத்துக்குள் சிபிஐ விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் விசாரணை ஜூலை 4ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் நீதி வாரியம் பிரதியுமானைக் கொலை செய்த 16 வயது சிறுவனை வயதுவந்தவராகக் கருதி விசாரணை நடத்த உத்தரவிட்டது நியாயமானதே; அதில் எந்தவித சட்ட விரோதமும் இல்லை என்று பிரதியுமான் தரப்பு வழக்கறிஞர் சுசில் தேக்ரிவால் கூறினார். ஆனால், இது சட்ட விரோதமானது என்றும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க சரியான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் 16 வயது சிறுவன் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கூறினார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon