மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 15 மே 2018

பணவீக்கத்துக்குக் காரணமான காய்கறிகள்!

பணவீக்கத்துக்குக் காரணமான காய்கறிகள்!

சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் காய்கறிகளின் விலையுயர்வு காரணமாக 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மே 14ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்ச் மாதத்தில் 2.17 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விலை உயர்வாலேயே இவ்வாறாகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உருளைக்கிழங்கின் விலை 67.94 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 0.29 சதவிகிதம் சரிந்திருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 0.87 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. பழங்களுக்கான விலை 19.47 சதவிகிதமும், வெங்காயத்தின் விலை 13.62 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

சர்க்கரை விலையில் 15.56 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் விலை 22.46 சதவிகிதம் குறைந்துள்ளது. எரிபொருள் பிரிவில் டீசலின் விலை அதிகபட்சமாக 13.01 சதவிகிதமும், பெட்ரோலின் விலை 9.45 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. அதேநேரம், சமையல் எரிவாயுவின் விலை 11.73 சதவிகிதம் குறைந்திருக்கிறது. உற்பத்திப் பொருள்கள் பிரிவில் அடிப்படை உலோகங்களின் விலை 13.04 சதவிகிதம் உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon