மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 ஏப் 2018

பேராசிரியை விவகாரம் - ஆளுநர் மீது சந்தேகம்: மார்க்சிஸ்ட்!

பேராசிரியை விவகாரம் - ஆளுநர் மீது சந்தேகம்: மார்க்சிஸ்ட்!

அருப்புக்கோட்டையில் மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குப் பேராசிரியை நிர்மலா தேவி கட்டாயப்படுத்திய விவகாரம் தொடர்பாகத் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜஸ்ட் செய்துகொண்டால், 85 சதவிகித மதிப்பெண்ணும், பணமும் தருவதாகக் கூறி நிர்பந்தப்படுத்தியது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த ‘மேலிடத்துக்கு’ இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியைப் போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி சில மாணவிகளுடன் பேசிய ஒலிக்கோப்பு தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதன்முறையாகப் பேசுவதாகவோ, இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை. மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்தது, தமிழ்நாடு அரசு தேர்வாணைய விடைத்தாள் திருத்தும் பணிக்குத்தான் அழைக்கப்பட்டது, துணைவேந்தர் நியமனங்கள் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய பூடகமான பேச்சு, கல்லூரி மாணவியர் மறுத்த பிறகும் 'தனித்தனியாக நிதானமாக யோசித்துச் சொல்லுங்கள்' என்கிற வற்புறுத்தல், வங்கிக் கணக்கில் அதிகப் பணம் போடுகிறேன் என்கிற ஆசை வார்த்தை, மேல்படிப்பு எதுவானாலும் உதவிக் கிடைக்கும் என இவற்றையெல்லாம் கவனித்தால் இவை தனிநபர் ஒழுக்க மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமே இல்லை என்பதும், இதுபோன்று வேறு பலரும், பாலியல் நடவடிக்கைகளுக்குக் கல்லூரி மாணவியரிடம் வலைவிரிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது. ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர் கல்வித் துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். அவரைப் பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

தென்மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள் துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் தமிழக ஆளுநர் தனது நியமனங்களில் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ‘தகுதி, திறமையைத் தாண்டி’ முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே.

தமிழக அரசு உடனடியாக பேராசிரியர் நிர்மலா தேவியின் ஒலிக்கோப்பு மற்றும் நியமனங்கள் குறித்த அவருடைய பேச்சுகள் குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரி மாணவியருக்கு வலைவிரிப்பது, ஆளுநரால் இந்தக் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் இதற்குப் பின் உள்ள சமூக விரோத கும்பல், இத்தகைய முறைகேடுகளில் உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும், இவை குறித்து உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமெனில் சந்தேகத்துக்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும், உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரிகமான போக்கினை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகத் தோன்றவில்லை.

உயர்கல்வித் துறையில் இத்தகைய கலாசாரம் பரவியிருப்பது கவலையும், வேதனையும் அளிக்கிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள்; அப்பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய கல்லூரிகளும் கல்லூரி ஆசிரியைகளும் தங்களின் சுயநலனுக்காக அப்பாவி மாணவிகளைச் சீரழிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது; கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இதற்கிடையே, பேராசிரியை நிர்மலா தேவி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon