நியூட்டன் படத்தில் நடித்ததற்காக இந்த ஆண்டின் தேசிய விருது பட்டியலில் சிறப்புப் பட்டம் பெற்ற நடிகர் பங்கஜ் திரிபாதி ‘இனி முட்டாள் தனமான படங்களில் நடிக்க மாட்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.
தேசிய விருது வெல்வது, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் பார்க்கவேண்டியது அல்ல. அடுத்த படைப்பில் முன்பைவிட சிறப்பாக பணியாற்றவேண்டிய பொறுப்பையும் அது தன்னுடனே கொண்டுவருகிறது. அப்படிப்பட்ட தேசிய விருது பெற்ற தகவலை அறிந்தபோது “நான் இன்னும் முழுமையாக இந்தத் தகவலை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறேன்” என்று கூறினார்.
லக்னோவில் இருந்தபோது தனக்கு விருது கிடைத்ததை அறிந்த பங்கஜ் தனக்கு தேசிய விருது கிடைத்ததன் தாக்கம் குறித்து விளக்கியபோது “முட்டாள்தனமான படங்களில் இனி நடிக்கமாட்டேன். எனக்குள் இருக்கும் நடிகனின் எந்தத் திறமையைப் பாராட்டி விருது கொடுத்திருக்கிறார்களோ, அந்த நடிகனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படங்கள் மற்றும் அந்தத் திறமைக்கு சவால்விடும் படங்களைத் தேர்வு செய்து நடிப்பேன். நடிகனாக என் வாழ்வில் கொண்டாட்டம் என்பது முடிந்துவிட்டது. இனி மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
காலா திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் பங்கஜ் திரிபாதி நடித்திருக்கிறார். ரஜினிக்கு வில்லனாக வரும் நானா பட்டேக்கரின் அணியில் இடம்பெறும் முக்கிய வில்லனாக அதிகம் பங்கஜ் திரிபாதி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.