மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 16 ஏப் 2018

ரஜினி வேஷம் கலைகிறது: பாரதிராஜா

ரஜினி வேஷம் கலைகிறது: பாரதிராஜா

தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரஜினி என்ன செய்துள்ளார் எனக் கேள்வி எழுப்பியுள்ள இயக்குநர் பாரதிராஜா, அவரது வேஷம் மெல்ல மெல்லக் கலைவதாகவும் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் ஒருபகுதியாகக் கடந்த 10ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் ஐபில் போட்டிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது போலீசார் தாக்கியதில் இயக்குநர்கள் களஞ்சியம், வெற்றிமாறன் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீஸைத் தாக்குவது போன்ற வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்த ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையினர் ஏப்ரல் 11ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”எங்கள் பெட்டிக்குள் பூ இருக்கிறது என்று நினைத்திருந்தோம். ஆனால் பூ நாகம்தான் இருந்துள்ளது. கட்சி சார்பில்லாமல் இத்தனை பேர் மொழி, இன உணர்வோடு போராட்டத்திற்குச் சென்றோம், அப்போது எங்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு அறிக்கை கொடுத்திருக்கலாமே” என்று குறிப்பிட்ட பாரதிராஜா, ”வாய் அசைவு மட்டும்தான் ரஜினியுடையது. வேறு யாரோ பின்னால் அமர்ந்து டப்பிங் பேசிக்கொண்டிருக்கின்றனர்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) தனது தனிப்பட்ட கண்டனத்தை பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால் நம் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு, நம் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு.

நான் அவரைக் கேட்கிறேன்... எது வன்முறையில் உச்சக்கட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.

தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ஒரு நடிகனை, தமிழ்த் திரையுலகம் சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி... தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே...

ஓ... இப்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவன் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்... காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழினம், சேதமடைந்தது எங்கள் தமிழர் சொத்துகள்.

அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்தபோதும், அங்குள்ள காவலர்கள் துரத்தித் துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.

சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன்தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன் செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.

நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டுக் குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் எங்கள் வீரத் தமிழ் இளைஞர்கள் பலர், காவல் துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பேசும்போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்” என்று எச்சரித்துள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon