மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 16 ஏப் 2018

தினமும் 6 லட்சம் லட்டுகள்!

தினமும் 6 லட்சம் லட்டுகள்!

கோடைக்காலத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தினமும் 6 லட்சம் லட்டுகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது லட்டு தயாரிக்கும் கூடத்தில் 550 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 310 பேர் லட்டு உருண்டை பிடிக்கிறார்கள். மற்றவர்கள் பூந்தி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஒரு ஊழியர் தினமும் 5 ஆயிரத்துக்கும் குறையாமல் லட்டுகளைத் தயாரிக்க வேண்டும். கூட்டம் அதிகமிருக்கும் நாளில் 5 ஆயிரத்து 500 லட்டுகளைத் தயாரிக்க வேண்டும். கோயிலில் சாதாரண நாட்களில் மொத்தமாக தினமும் 3 லட்சம் லட்டுகளும், கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகளும் தயாரித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. தற்போது தினமும் சிபாரிசு இல்லாமல் 50 ஆயிரம் கூடுதல் லட்டுகள் பக்தர்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கேஎஸ் சீனிவாசராஜு,“கோடைக்காலம் தொடங்கி விட்டதால், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, லட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தினமும் 6 லட்சம் லட்டுகளைத் தயாரித்து இருப்பு வைத்து, பக்தர்களுக்கு வினியோகிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

6 லட்சம் லட்டுகளைத் தயாரிக்க பூந்தி தயாரிக்கும் இடம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. பூந்தி தயாரிக்கும் கூடம் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணிக்காக ஊழியர்களுக்கு எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பூந்தி தயாரிக்கும் கூடத்தில் வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க 6 லட்ச ரூபாய் செலவில் ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றன. பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பக்தர்களுக்காக நாள்தோறும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை தேவஸ்தானம் இருமடங்காக உயர்த்தியது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon