மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மாணவிகளை பலியாக்க பேராசிரியை உடந்தை!

மாணவிகளை பலியாக்க பேராசிரியை உடந்தை!

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை, பேராசிரியை ஒருவரே பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பி.நிர்மலா தேவி பணிபுரிந்து வருகிறார். பேராசிரியையாக 15 ஆண்டுகளாக பணியாற்றும் இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளது வாட்ஸ் அப்பில் ஆடியோவாக வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப் ஆடியோவில் நிர்மலா தேவி, “வீட்டுல பெரியவங்க யாரும் இருக்காங்களா? எனக் கேட்கிறார். இல்லை மேடம் என மாணவி பதில் அளிக்கிறார்.

அதைத் தொடர்ந்து பேராசிரியை, “நா இப்ப பேசப்போறது ஹையர் அஃபிசியல் மேட்டர். ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்கனும். நமக்குள்ள இதுவரைக்கும் ஆசிரியர், மாணவி ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கோம். இப்ப அடுத்த லெவல் போறதுக்கு உண்டான சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைச்சிருக்கு.

அகடமிக் சைடுல உங்களுக்கு நான் எந்த அளவுக்கு சப்போர்ட்டிவா இருந்திருக்கேன். இப்போ ஆபர்ச்சுனிட்டி வருது. போன ஸ்பீக்கர்ல போட்டிருக்கியா? ஸ்பீக்கர்ல போடு. நாலு பேரும் கேளுங்க. நீங்க 4 பேரும் சீக்ரெட்டா ஒண்ணு பண்ண வேண்டி இருக்கு. அப்படி பண்ணா நீங்க பெரிய லெவலுக்கு வர முடியும். யூனிவர்சிட்டியை பொறுத்தவரைக்கும் சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறதுக்குக் கல்லூரி மாணவிகள்கிட்டே இருந்து ‘சில விஷயங்களுக்களை அதிகாரிகள் எதிர்பார்க்குறாங்க.

இதுவரைக்கும் அந்த லெவலுக்கு நான் இறங்கினது இல்லை. ஆனால், சில விஷயங்களை அவங்க கொஞ்சம் எதிர்பார்க்கிறாங்க. ரொம்ப நாளா அவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி நானும் நாகராஜன் சாரும் பேப்பர் ரீவெல்யூயேசனுக்கு வந்தோம்ல அந்த சந்தர்ப்பத்திலிருந்து என்ன ரொம்ப கேட்டுட்டு இருக்காங்க.

இந்த விஷயம் வெளியில் தெரிஞ்சிதுனா, கண்டிப்பா வந்து இதுல யார் யாரு இன்வால்வ் ஆகியிருக்காங்களோ அவங்களை பற்றி நெகட்டிவா வர்றதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. இன்னும் ஒன்றரை மாதம் தான். அப்புறம் பிராக்டிகல்ஸ் முடிஞ்சிரும். நான் இந்த ஸ்டெப்பை எடுக்க ஆரம்பிக்கிறேன். அதாவது நீ ‘அந்த மாதிரி’ நடந்துக்கிட்டா அகடமிக் ரீதியாவும், ஃபினான்சியலாவும் நல்ல சப்போர்ட் இருக்கும். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சப்போர்ட் இருக்கும். இன்னும் கொஞ்சம் பேசணும்.

நீங்க இதை உங்க அப்பா, அம்மாவுக்கு சொல்லிட்டு செய்வீங்களா? சொல்லாமல் செய்வீங்களாங்கிறது எனக்கு தெரியாது. பிளான் பண்ணுங்க. புதுசா அக்கவுண்ட ஓபன் பண்ணிட்டா, அமவுண்டை அக்கவுண்ட்ல போட்டு விடுறேன். நீங்க 4 பேரோ, 5 பேரோ... சரியா? நான் உங்ககிட்ட அடுத்த வாரம் பேசுறேன். நீங்க இன்னும் கொஞ்சம் டீடெய்லா பேசுங்க” என கூறுகிறார்.

மேடம் இதுபற்றி இதுக்கு மேல பேசவேண்டாம் என மாணவிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியை வேண்டாம்னு சொல்லுறீங்களா? சரிடா கண்ணா. ஒரு வாய்ப்பு வந்தது. அதான் சொல்றேன். இதை வெளில சொல்லிக்க வேணாம். உங்க குடும்பத்துகுள்ளயே சொன்னா வித்தியாசமா தெரியும். இன்னைக்கு வியாழக்கிழமை நீங்க வெள்ளிக்கிழமை சனிக்கிழமை நல்லா யோசிச்சு ஞாயிற்றுக்கிழமை சொல்லுங்க. ஆப்பர்சூனிட்டி அவ்வளவு ஈஸியா வராது. அதனால இன்னும் கொஞ்சம் யோசிங்க. நானே யோசிச்சுத்தான் கேட்கிறேன்.

வேண்டாம் மேம் என மாணவிகள் மறுக்கின்றனர்.

நான் சொல்ல வர்ற ரீசன் வந்து, அந்த கவர்னர் மீட்டிங் வீடியோவுல நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு என்னால மூவ் பண்ண முடியும். இந்த ஹிண்ட் மட்டும் தான் இப்போ கொடுப்பேன். ஏன்னா. அந்த அளவுக்கு ரகசியம் இது. என்னையவே நிறைய டெஸ்ட் பண்ணிருக்காங்க. அதுக்கப்புறம் தான் இந்த மாதிரி என்கிட்ட கேட்ருக்காங்க. நீங்க வேண்டாம்னு சொன்னா நா உங்க மார்க்குல எல்லாம் கை வெக்க மாட்டேன் டா. ஆனால் நீங்க யோசிங்க இந்த சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது.

நா அடுத்த லெவல்க்கு போகபோறேன். கூட உங்கள கை துணைக்கு கூப்பிடுறேன். உங்களை கை தூக்கி விட கூப்பிடுறேன். இந்த காலத்துல நா பேச வர விஷயங்கள் எல்லாம் ரொம்ப சாதரணமான விஷயம், அது உங்களுக்கும் தெரியும், ஏன் இந்த உலகத்துக்கே தெரியும். யாருடைய பேச்சையும் கேட்காம நீங்களா யோசிச்சு சொல்லனும். நா சனிக்கிழமை ஈவ்னிங் கால் பண்றேன். ஓகே வா.

மாணவிகள் இதுக்கு மேல பேச வேண்டாம். எங்களுக்கு இஷ்டம் இல்ல மேம் என கூறுகின்றனர். ஓகே டா உங்களுக்கு இஷ்டம் இல்லனாலும், இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என பேராசிரியை கூறுகிறார். மாணவிகள் சரி என கூறி தொடர்பை துண்டிக்கின்றனர்.

பேராசிரியர் பேசிய ஆடியோ லிங்க்

அதைத் தொடர்ந்து, மாணவிகள், கல்லூரி செயலாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பேராசிரியை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என மறுப்பு தெரிவித்த பின்னரும் விடாமல் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வகையில் பேராசிரியை பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்ட நிலையில், பேராசிரியை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதால், கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை 15 நாட்கள் பணியிடை இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் பேசிய நோக்கத்திற்கு பின்னணியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்? என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon