மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன்!

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு முன்ஜாமீன்!

தலைமைச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்த வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு டெண்டர்களை முறைகேடாக வழங்குவதாகப் புகார் தெரிவித்தனர்.

முன்னதாக, இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் என்பதால் அவர்களைத் தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். தடையை மீறி உள்ளே நுழைய அவர்கள் முயன்றனர். இதனால் இரு தரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மீறி உள்ளே சென்று இருவரும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

இந்நிலையில், அவர்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் போலீசார் அனுமதியை மீறி உள்ளே செல்ல முயன்றது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவருக்கும் நிபந்தனைகளுடன்கூடிய முன் ஜாமீன் வழங்குவதாகத் தெரிவித்த நீதிபதி, அவர்கள் "மதுரையில் தங்கி தல்லாக்குளம் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்துக்குக் கையெழுத்திட வேண்டும். பிறகு சென்னை கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon