மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

விண்வெளி வீராங்கனையாகும் அதிதி

விண்வெளி வீராங்கனையாகும் அதிதி

பாலிவுட் நடிகை அதிதி ராவ், வருண் தேஜ் உடன் இணைந்து தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிதி ராவ் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதாக அந்தப் படம் வெளியாகியபோது கூறப்பட்டது. ஆனால், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே மூன்று தேசிய விருதுகள் வாங்கிய சிருங்காரம் படத்தில் அவர் அறிமுகமானது பலரும் அறியாத தகவல். தமிழில் மீண்டும் மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்துவரும் அவர், தற்போது சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

ஸ்பேஸ் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் விண்வெளி வீரர்களாக ரவி தேஜும் அதிதி ராவும் நடிக்கின்றனர். படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கிலுக்கு அளித்த பேட்டியில், “சங்கல்ப் திரைக்கதையை விவரிக்கும்போதே அதிதிக்கு மிகவும் பிடித்துவிட்டது. முதலில் இந்தப் படத்தில் அதிதி நடிப்பாரா எனப் படக்குழுவினருக்கு தயக்கம் இருந்தது. ஆனால், கதையைக் கேட்ட பின் அவர் அடைந்த உற்சாகம் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது” என்று கூறியுள்ளனர்.

இந்தப் படத்துக்காக வருண் தேஜ் கஜகஸ்தானில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் அதிதியும் அதில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு கதாநாயகியும் படத்தில் இணையவுள்ளார். “அதிதியின் கதாபாத்திரத்தோடு ஒப்பிடும்போது அந்தக் கதாபாத்திரம் சிறியதாக இருக்கும். வருண் தேஜின் காதலியாக நடிக்க வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon