மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

செவிலியர் தற்கொலை: போராட்டம் முடிவுக்கு வந்தது!

செவிலியர் தற்கொலை: போராட்டம் முடிவுக்கு வந்தது!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்திற்குக் காரணமாகக் கூறப்பட்ட மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கடலூர் மாவட்டம், பெரிய கரிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாலா, திருப்பூரிலுள்ள வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 2 ஆண்டுகளாகச் செவிலியராக பணியாற்றிவந்தார். கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 10) இரவு 7 மணியளவில் பணியில் இருந்தபோது அவர் தனது அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து மணிமாலாவின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மணிமாலாவின் தற்கொலைக்கு மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோர்தான் காரணம் என்று கூறி, மணிமாலாவின் உறவினர்களும் மற்ற செவிலியர்களும் கடந்த 3 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டக்காரர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பயனில்லை. இதையடுத்து நேற்று (பிப்ரவரி 13) நள்ளிரவு சுகாதாரத் துறை இணை இயக்குநர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், மருத்துவ அலுவலர் தமயந்தி, மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மணிமாலாவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மணிமாலாவின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொண்டனர். இதனால் 3 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon