மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

கல்வி நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் ரத யாத்திரையா?

கல்வி நிறுவனங்களுக்கு ஆர்எஸ்எஸ் ரத யாத்திரையா?

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ரத யாத்திரையை அனுமதிப்பது மதச்சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக அரசு இதனை உடனடியாகத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “விவேகானந்தரின் சீடர் என்று கூறப்படுபவர் அயர்லாந்தைச் சேர்ந்த நிவேதிதா. அவரது 150ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு அவரின் ரத யாத்திரை புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறது (2018 ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 25ஆம் தேதி வரை). இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாயமான் முயற்சியாகும்” என்று கண்டித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பியவர் விவேகானந்தர் என்பதுதான் விவேகானந்தருக்குள்ள தனி முத்திரை. அவரின் சீடர் ஒருவரை முன்னிலைப்படுத்தி, தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்குள் திணிப்பது எந்த அடிப்படையில்? இதன் உள்நோக்கம் என்ன? இது மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கை அல்லவா” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், இந்துத்துவாவையும், சங் பரிவார்களையும் மாணவர்கள் மத்தியில் திணிக்கும் நச்சு எண்ணம்தானே இதன் பின்னணியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற அரசின் கல்வி நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட மதவாதச் சிந்தனைகளைத் திணிப்பதற்கு தமிழ்நாடு அரசின் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் மதமாகிய நச்சு விதைகளை ஊன்றினால், அதன் விளைவு என்ன? பெற்றோர்கள் இந்தப் பிரச்சினையில் அலட்சியமாக இருக்கலாமா? இதுகுறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்குக் கடிதம் எழுத வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இன்றைக்கு நிவேதிதா என்று ஆரம்பித்தால், ஒவ்வொரு இந்துத்துவவாதியையும் முன்னிறுத்தி ரத யாத்திரைக்கு வழி வகுக்காதா என்றும் கூறியுள்ள அவர், “இதேபோல, கல்வி நிறுவனங்களில், தந்தை பெரியார் பெயரில் ரத யாத்திரை நடத்திட தமிழ்நாடு அரசு அனுமதிக்குமா? அண்ணா, புரட்சிக் கவிஞர் பெயர்களில் ரத யாத்திரை நடத்திட அனுமதி அளிக்குமா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அண்ணா திமுக என்ற பெயரில் அவர் கொள்கைக்கு விரோதமாக ஆன்மிக அக்கிரகார ஆட்சியை நடத்தலாமா? ஆர்எஸ்எஸ்ஸுக்கு அடிபணியலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள கி.வீரமணி, உடனே இந்த ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon