மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

இரட்டைப் பதக்கங்களைக் கைப்பற்றிய வீராங்கனைகள்!

இரட்டைப் பதக்கங்களைக் கைப்பற்றிய வீராங்கனைகள்!

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் இரண்டு வீராங்கனைகள் இரண்டு முறை பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்கள்.

2018ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் தொடர் தென் கொரியாவில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 13) வரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள ஜெர்மனி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. அதில் குறிப்பாக லாரா டேஹல்மேயர் இரண்டு தங்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.

பெண்களுக்கான 10 கிலோமீட்டர் பயத்தலான் பனிச்சறுக்குப் போட்டியிலும் ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த லாரா டேஹல்மேயர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியதுடன், 7.5 கிலோமீட்டர் போட்டியிலும் தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார். அதேபோல் நெதர்லாந்து நாட்டினைச் சேர்ந்த ஐரீன் வுஸ்ட் ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாட்டில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 3000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியுள்ளார். இதனால் 4 தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கத்துடன் நெதர்லாந்து அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கத்துடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த தொடரில் இன்னும் பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் காத்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon