மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சாம்சங்கை வீழ்த்தி க்ஷியோமி முதலிடம்!

சாம்சங்கை வீழ்த்தி க்ஷியோமி முதலிடம்!

2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் க்ஷியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

மொபைல்போன்கள் விற்பனை குறித்து சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 25 சதவிகிதப் பங்குகளுடன் சீனாவைச் சேர்ந்த க்ஷியோமி நிறுவனம் முதலிடம் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. 23 சதவிகிதப் பங்குகளுடன் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் லெனோவோ (9%) மூன்றாம் இடத்திலும், 6 சதவிகிதப் பங்குடன் விவோ மற்றும் ஆப்போ நான்காம் இடத்திலும் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பிரீமியம் மற்றும் சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. ரூ.26,000 முதல் ரூ.50,000 வரையில் விலை கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனம் 48 சதவிகித சந்தைப் பங்கையும், சீனாவின் ஒன் ப்ளஸ் நிறுவனம் 23 சதவிகிதப் பங்கையும், சாம்சங் நிறுவனம் 10 சதவிகிதப் பங்கையும் கொண்டுள்ளன. ரூ.50,000க்கும் மேல் விலை கொண்ட சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில், 73 சதவிகிதப் பங்கை ஆப்பிள் நிறுவனமும், 20 சதவிகிதத்தை சாம்சங் நிறுவனமும், எஞ்சிய 7 சதவிகிதப் பங்கை கூகுள் நிறுவனமும் கொண்டுள்ளன.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon