மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

இரண்டாவது நாளாகத் தொடரும் எல்.பி.ஜி. போராட்டம்!

இரண்டாவது நாளாகத் தொடரும் எல்.பி.ஜி. போராட்டம்!

தென்மண்டல சமையல் எரிவாயு லாரி உரிமையாளர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 13) நீடிப்பதால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் புதிய வாடகை டெண்டரை அறிவித்தன. அதன்படி டேங்கர் லாரிகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை உருவானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (பிப்ரவரி 12) முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியது. இந்தப் போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் நீடிப்பதால் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இன்று கியாஸ் டேங்கர் லாரிகள் இயங்கவில்லை. இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை, சிலிண்டர்கள் நிரப்பும் மையங்களுக்குக் கொண்டுசெல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த 4,300 எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்திக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர். இதனால் இந்த மண்டலத்தில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடிப் பேச்சு வார்த்தை நடத்திச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம், "முன்பு போல மண்டலம் வாரியாக டெண்டரை அமல்படுத்தக் கோரி 2ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு மண்டலத்திலும் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon