மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

‘காலா’: ரசிகர்கள் விருப்பத்தில் பின்னணி இசை!

‘காலா’: ரசிகர்கள் விருப்பத்தில் பின்னணி இசை!

காலா படத்தில் ரஜினி அறிமுகக் காட்சிக்கான பின்னணி இசை எந்த மாதிரியாக இருக்க வேண்டுமென ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடிக்கும் ‘காலா’ திரைப்படம் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்கிற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. காலாவின் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டுவிட்ட நிலையில் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ‘காலா’ படம் குறித்து முக்கிய ட்விட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், “‘காலா’ ரஜினிக்கான அறிமுக இசை 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா; 1990 -2000 காலகட்டத்துப் பாடல் மாதிரி இருக்க வேண்டுமா; இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி நவீன ட்யூன்களில் வேண்டுமா இல்லை எல்லாம் கலந்த கலவையாக இருக்க வேண்டுமா?” என்று ரசிகர்களிடமே கேள்விகளை முன் வைத்துள்ளார்.

ஒரு இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் படத்தில் எப்படிப்பட்ட அறிமுகப் பாடல் மற்றும் ட்யூன் வேண்டும் என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தற்போதைய ஓட்டு நிலவரப்படி ரஜினி அறிமுகத்திற்கான பின்னணி இசை, அனைத்தும் கலந்த கலவையாக இருக்க வேண்டுமென்பதே அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

கபாலி படத்தில் ரஜினி அறிமுகமாகும்போது ஒலிக்கும் நெருப்புடா பாடலின் பின்னணி இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே காலா படத்தில் ரஜினி அறிமுக இசை எந்த மாதிரி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon