மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

ஜெ.படத்துக்கு எதிர்ப்பு: கரும்புள்ளிப் பிரச்சாரம்!

ஜெ.படத்துக்கு எதிர்ப்பு: கரும்புள்ளிப் பிரச்சாரம்!

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கரும்புள்ளிப் பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை இன்று (பிப்ரவரி 12) சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட சபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டதை எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கரும்புள்ளிப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.

முன்னதாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "60 ஆண்டுகள் நடந்து வைர விழா கண்ட பாரம்பரியமிக்க தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் இருப்பது ஒரு கரும்புள்ளியே என்பதை வெளிப்படுத்தும் விதமாக இப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் அனைவரும் தங்களது முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வெள்ளைப் பின்புலத்தில் ஒரு கருப்புப்புள்ளி இருப்பதுபோன்ற படத்தை தங்களது சுயவிவரப்படமாகவும், முகப்புப்படமாகவும் (Cover pic, Profile pic, Display pic) மாற்றி சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு ஜனநாயக முறையில், அற வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுகிறோம்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் தண்டிக்கப்பட்டனர். அதில் ஜெயலலிதா(ஏ1), இப்போது சசிகலா (ஏ2), இளவரசி (ஏ3), சுதாகரன் (ஏ4) உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றனர். ஏ1 ஆகிய ஜெயலலிதா இல்லாமல், அதாவது பொதுஊழியராக-முதல்வராக இருந்த ஜெயலலிதா இல்லையென்றால் ஏ2 சசிகலா உள்ளிட்ட மூவர் எப்படி கூட்டுச்சதி செய்ய முடியும்? எனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அவர் இறந்துவிட்டதால் அவரைத் தண்டிக்க முடியவில்லை அவ்வளவுதான்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சிக்கு சட்டபஞ்சாயத்து இயக்கம் விடுத்துள்ள கோரிக்கையில், "இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என்று நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார்,காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கமும்; “ பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது” என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தை மறுபக்கமும் மாட்டி வையுங்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon