மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

மார்ச் மாதம் நிறைவுறும் 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பானது, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் இன்னும் அதிகமானது. இந்நடவடிக்கைகளால் நீண்ட காலப் பயன்கள் இருக்கும் என்றாலும் துவக்கத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீடுகளைக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி (டி.பி.எஸ்.) இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது ஆய்வறிக்கையில், 2017-18 நிதியாண்டில் 6.6 சதவிகித வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்த 2018-19 நிதியாண்டில் 7 சதவிகித வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வளர்ச்சி விகிதம் குறித்து சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அக்டோபர் மாதம் வரையில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மந்தமாகவே இருந்தது. அதன் பின்னர் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் உற்பத்தி மேம்படத் தொடங்கியது. இந்த ஆண்டில் விவசாய உற்பத்தியும் குறைவாகவே இருந்தது. ஆனால் ராபி பருவ சாகுபடி இலக்கை விட அதிகமாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி போதுமான அளவில் இருக்கும். முதலீட்டு அளவிலும் 4.5 சதவிகித வளர்ச்சி காணப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon