மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

நீதிபதிகள் புகார்: ஜனநாயகத்துக்கு ஆபத்து!

நீதிபதிகள் புகார்: ஜனநாயகத்துக்கு ஆபத்து!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் தலைமை நீதிபதிக்கு எதிராக வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்திலும் புயலைக் கிளப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் நேற்று (ஜனவரி 12) காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ‘உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; ஜனநாயகத்தன்மை பேணப்படவில்லை’ என்று கூட்டாகப் பேட்டியளித்தனர். இந்த விவகாரம் நீதித் துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில், “முதன்முறையாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் கூறியுள்ளது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் நீதிபதி லோயா விவகாரத்தையும் எழுப்பியுள்ளனர். நீதிபதி லோயா இறப்பு குறித்து உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், “நீதிமன்றத்தில் நடப்பதை பொது வெளியில் கொண்டுவர வேண்டிய சூழ்நிலைக்கு நீதிபதிகள் தள்ளப்பட்டனர். இது இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். நீதிபதிகள் எழுப்பிய பிரச்னைகள் குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது. தலைமை நீதிபதியும், சம்பந்தப்பட்ட நீதிபதியும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ், “உச்ச நீதிமன்றத்தின் பெருமைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன இருக்கும். ஜனநாயகத்தின் தூணாக நீதிமன்றம் இருக்க வேண்டும். அது எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனிக்கவேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு” என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா:

நீதிபதிகளின் கருத்து எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் சீதாராம் யெச்சூரி:

உச்ச நீதிமன்றத்தின் தனித்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த பிரச்னை எழுந்தாலும் அவை சரி செய்யப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் டி.ராஜா:

நீதிபதி செல்மேஸ்வரரை நீண்ட நாள்களாகத் தெரியும். அவரும் மற்ற நீதிபதிகளும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தபோது, அவரைச் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். நாடு மற்றும் ஜனநாயக நலன் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி:

பொதுவாக நாம் நீதிபதிகளை விமர்சனம் செய்ய முடியாது. அவர்கள் அதிகமான கண்ணியம் கொண்டவர்கள். அவர்கள் சட்டத்தின் வழி நீதி பரிபாலனத்துக்கு வாழ்க்கையையே தியாகம் செய்து உள்ளனர். அவர்கள் மூத்த வழக்கறிஞர்கள் போன்று பணம் சம்பாதிக்க முடியாது. அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிட்டு இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பும் ஒருமித்த கருத்துக்கு வந்து, தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon