மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

‘வளர்மதிக்கு பெரியார் விருது; ஜூலி படம் பேரு உத்தமி’ - தமிழனுக்குத்தான் எத்தனை அதிர்ச்சிகள். சோதிக்காதீங்கடா.

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, “நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்” என அவரை அழைத்தார்கள்.

ஞானியோ, “இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை” என்று கூறிவிட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயைத் தந்து, “எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அவர்கள், “என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள் மகராஜ்” என்றனர்.

“ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் முழுகும்போதெல்லாம், இந்தப் பாகற்காயையும் முக்கி என்னிடம் திரும்பக்கொண்டுவந்து இதைச் சேர்த்துவிடுங்கள்” என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்.

திரும்பவந்து அவரிடம் அந்தப் பாகற்காயைப் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்தப் பாகற்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்.

“புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும்” என்றார்.

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் அவர்கள் முகம் மாறியது.

“தித்திக்கும்னு சொன்னீங்க.... ஆனா கசக்குதே” என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்.

“பார்த்தீர்களா... பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும், அதன் சுபாவத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதைப் போலவே, நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர்குணங்களையும் மாற்றிக்கொள்ளாமல் எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்தக் கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணியத்தலங்களுக்கோ 1008 முறை வலம்வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்துவிடப் போவதில்லை. மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வந்தால்தான் வாழ்க்கை இனிமையாகும்” என்றார் அந்த ஞானி.

இந்தப் பாகற்காய் கதை போலதான் இருக்கு போகியும்.

போகி அதுவுமா கெட்ட குணங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் பொசுக்கணும்னு சொன்னா நம்மாளுக டயரை பெட்ரோல் ஊத்திக் கொளுத்துக்கிட்டு இருக்காங்க. எத்தனை போகி பண்டிகை வந்தாலும்... ஹூம்ம்ம்ம்... ஒரு தேசிய கடமை இருக்கே...

அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துகள்.

சொல்லலேன்னா நம்மள சமூகத்துல இருந்து ஒதுக்கி வெச்சிருவாங்க.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon