மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

வைரமுத்துவை மிரட்டுவதா?

வைரமுத்துவை மிரட்டுவதா?

‘ஜனநாயகத்தில் ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டுமே இருக்க முடியும்’ என்று கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் ஆண்டாள் குறித்த நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்துவின் பேச்சு சர்ச்சைக்குரிய விதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வைரமுத்துவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்து அமைப்புகள் சார்பில் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டன. பல்கலைக்கழக ஆராய்ச்சி கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததையே குறிப்பிட்டேன் என்று கூறி வருத்தம் தெரிவித்தார் கவிஞர் வைரமுத்து. இருப்பினும் பாஜகவைச் சார்ந்த எச்.ராஜா, வைரமுத்துவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் தினமணி நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் வைரமுத்துமீது நடக்கும் அவதூறு அர்ச்சனைகளை கண்டித்து மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாரம்பர்யமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள்காட்டியிருந்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து ‘யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். அக்கட்டுரையைப் பிரசுரித்த நாளிதழிலும் ‘ஆசிரியர் வருத்தம்’ என்றெல்லாம் போடாமல், இதழின் பெயரையே போட்டு வருந்துகிறது என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் ‘வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்’ என்று காத்துக்கொண்டிருக்கும் ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்துமீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதும் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல, மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்துக்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும்விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்துமீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்துக்கும் வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon