மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

அரசு செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்!

அரசு செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்!

‘அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை ஊதியத்தில் பணியாற்றும் 11 ஆயிரம் செவிலியர்களுக்குத் தொகுப்பு ஊதியமாக 7,700 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த நவம்பர் மாதம் 3,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த கணேஷ் என்பவர், செவிலியர்கள் போராட்டத்துக்குத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் 9,533 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள். இதையடுத்து அரசு வரும் நிதியாண்டு இறுதிக்குள் 200 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon