மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

விஷாலுக்குத் தடை இல்லை!

விஷாலுக்குத் தடை இல்லை!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) பொதுக்குழுக் கூடுகிறது.

விஷால் தலைமையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வரும் (டிசம்பர் 10) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ‘வரும் 10ஆம் தேதி நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவில், தேர்தல் வாக்குரிமை தொடர்பாக சங்க விதிகளில் திருத்தம் கொண்டு வரச் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு திருத்தம் கொண்டுவந்தால், சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வாக்குரிமை பாதிக்கப்படும். புதிய திருத்தத்தின்படி மூன்று படங்கள் தயாரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று பொதுக்குழுவில் சங்க விதியில் திருத்தம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, வரும் 10ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால், பொதுக்குழுவின் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை 13ஆம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிபதி, இம்மனு குறித்து பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon