மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’!

தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’!

தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், சுயேச்சையாகப் போட்டியிடும் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னமும், கட்சியும் எடப்பாடி தரப்புக்கு வழங்கப்பட்டதால், இடைத்தேர்தலில் தினகரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். போட்டியிட தனக்கு தொப்பி சின்னம் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் என்று அறிவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டதால் தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைப்பது சிக்கலானது.

இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (டிசம்பர் 7) வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 58 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்குச் சின்னம் கொடுக்கும் பணியும் நேற்றே நடைபெற்றது. தினகரனின் தொப்பி சின்னத்துக்குப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளான நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை மனு அளித்தன. குலுக்கல் முறையில் தொப்பி சின்னம், நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷுக்குக் கிடைத்தது. எனவே, தினகரன் மாற்று சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தினகரன் மாற்று சின்னங்களாக குறிப்பிட்டிருந்த விசில், மட்டைப் பந்து சின்னங்களில் ஒன்றாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. சுயேச்சைகளுக்குச் சின்னம் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டதால், தினகரன் கேட்ட மட்டைப் பந்து, விசில் சின்னங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எந்தச் சின்னத்தைக் கொடுத்தாலும் போட்டியிடுவேன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். அதன்படி எதிரிகள், துரோகிகளின் பிரஷரை ஏற்றும்விதமாக தாய்மார்கள் விரும்பும் பிரஷர் குக்கர் சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon