மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 26

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 26

அருந்ததி ராய்

சிறந்த எழுத்தாளர், சமூக அக்கறை கொண்ட நபர் என்ற பன்முகங்கள் இவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் கழித்து தனது இரண்டாவது நாவலை எழுதிய அருந்ததி ராய், மீண்டும் நல்ல விமர்சனங்களுடன் கூகுள் தேடலில் காணப்படுகிறார். நாவலைப் பொறுத்தவரையில், ஒரேயொரு புத்தகம் எழுதியிருந்தாலும் அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் முற்றிலுமாக அடங்க இருபதாண்டுகள் எடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தக எழுத்தாளராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், பேச்சாளர் போன்ற பல விஷயங்களில் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கும் அருந்ததி ராய் அவர்களைப் பற்றி இந்த வாரம் காண்போம்.

அம்மா மூலம் தொடங்கிய எழுத்துப் பயணம்

சூசனா அருந்ததி ராய், இந்தியாவில் உள்ள மேகாலாயா என்ற மாநிலத்தில் நவம்பர் மாதம் 1961ஆம் ஆண்டில் பிறந்தார். கேரளாவைச் சேர்ந்த தாய், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தந்தைக்குப் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே தந்தையின் அரவணைப்பின்றியே வளர்ந்தார். பெற்றோரின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிளவையடுத்து, அருந்ததி தனது தாயாருடன் கேரளாவில் வசிக்கலானார். தனது குழந்தைப் பருவத்தை கேரளாவில் கழித்த அருந்ததி, தனது தாயார் நிறுவிய பள்ளியில் ஆரம்ப கால கல்வியைக் கற்றார். பொதுவான பள்ளிகளைப் போல இன்றி, வித்தியாசமான முறையில் கல்வியைப் புகட்டிய அந்தப் பள்ளியில், மொழி, அறிவு மற்றும் புரிதல் போன்ற புத்தகத்தில் அல்லாத திறன்களை அருந்ததி சிறு வயதிலேயே கச்சிதமாகக் கற்றுக்கொண்டார்.

அருந்ததியின் தாயார் மேரி ராய், Free Writing என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்ததன் மூலம், எழுதுவதற்கான முதல் பாதையை வகுத்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை மற்றும் சிறு நாளிதழ்களில் கருத்துக் கடிதம் மற்றும் சிறு குறிப்புகள் எழுதுவதன் மூலம் அருந்ததி மெதுவாக எழுத்து வட்டத்துக்குள் நுழைய ஆரம்பித்தார். “நான் எழுதுவதில் கெட்டிக்காரி என்று எனக்கும், என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் தெரியாது. ஆனால், மனதில்பட்ட விஷயங்களைப் பளிச்சென்று எழுத்து மூலம் சொல்லக்கூடிய திறன் என்னிடம் உண்டு என்பது மட்டும் எனக்கு அப்போது தெரியும். இந்த எல்லா அனுபவங்களும் ஒருசேர அமைந்து என்னுடைய எழுத்துப் பயணம் சரியான வடிவத்தை அடைந்தது” என்று அருந்ததி சில பேட்டிகளில் குறிப்பிடுகிறார்.

கட்டடக் கலை படிப்பு மற்றும் தொடர் தோல்விகள்

சுயமாகச் சிந்திக்கும் திறன் ஒருபுறம் இருந்தாலும், தானாக வாழ்க்கையில் அனைத்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற வேகமும் அருந்ததிக்கு அப்போது அதிகமாகவே இருந்தது. எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடனும் ஆர்வத்துடனும் தன்னுடைய பதினாறாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் காட்டிலும், பணப்பற்றாக்குறை அவரைச் சற்று அதிகமாகவே வாட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். பழைய பாட்டில் மற்றும் பொருள்களைக் கடையில் தந்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிது காலம் தனது வாழ்க்கையைக் கழித்தார்.

மனிதர்களின் இயல்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் சமூக மாற்றங்களை அந்தச் சிறு வயதிலேயே புரிந்துகொண்டாலும், எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் சென்ற அந்த நாள்கள் மீது வெறுப்பு ஏற்படவே, அடுத்த கட்டத் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கலானார் அருந்ததி. டெல்லியில் கட்டடக் கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். படித்தது கட்டடம் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், அந்த நுணுக்கங்களை எழுத்தில் கொண்டு வர முயற்சித்தார். இவர் கற்ற கட்டடக் கலை நுணுக்கங்களைக் கதையின் பின்புல விவரங்களை எழுதப் பின்னாளில் உபயோகித்திருக்கிறார்.

ஜெரார்ட் டி குன்ஹா என்பவருடன் படிக்கும் சமயத்தில் பழக்கம் ஏற்பட்டு, அந்தப் பழக்கம் காதலாக மாறித் திருமணத்தில் முடிந்தது. பணம் சம்பாதிப்பது மற்றும் வேலை என்ற சாதாரண வாழ்க்கை முறையை விரும்பாத இருவரும் திருமணத்துக்குப் பின் கோவா மாநிலத்துக்குச் சென்று அங்கு நான்காண்டுகள் வசித்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கேக் போன்ற தின்பண்டங்களை விற்று அதன் மூலம் வந்த வருவாயைக்கொண்டு இவர்களுடைய வாழ்க்கை சென்றது.

இதிலும் சலிப்பு ஏற்படவே அருந்ததி திருமணத்தை முறித்துக்கொண்டு மீண்டும் டெல்லிக்குச் சென்றார். நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய மையத்தில் (National Institute of Urban Affairs) பணியாற்றிய இவர், பிரதீப் க்ரிஷன் என்ற திரைப்பட இயக்குநரைச் சந்தித்தார். இவர்களுடைய நட்பு திருமணமாகப் பரிணமித்தது. அருந்ததியின் எழுத்தாளர் பயணம் பிரதீப் மூலம் சரியான வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரைக்கதை மற்றும் முதல் நாவல்

இந்தச் சமயத்தில் அருந்ததிக்கு இத்தாலிக்குச் சென்று வரலாற்றுக் கட்டடங்களைச் சிறப்பிக்கும் பணி ஒன்று அமைந்தது. இத்தாலிக்குச் சென்ற பின், தன்னுடைய எழுத்து ஆர்வத்தை மேலும் அதிகரித்துக்கொண்டது மட்டுமின்றி, இந்தியா திரும்பிய பின், முழு நேர எழுத்தாளராகத் தன்னுடைய வாழ்வை மாற்றியமைத்துக் கொண்டார். தன்னுடைய முதல் எழுத்துகளை அருந்ததி ஒரு திரைக்கதைக்குத் தந்தார். பிரிட்டனின் புகழ்மிக்க ஐடிவி என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் எடுக்கவிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடருக்குத் திரைக்கதை எழுதினார். அந்நிறுவனம், தயாரிப்பை நிறுத்திவிடவே, அருந்ததியின் முதல் திரைக்கதை வெளியே வருவதற்குள் மறைந்தே போனது.

இருப்பினும், சோர்வடையாமல் பல குறும்படங்களுக்குக் கதை மற்றும் திரைக்கதை எழுத தொடர்ந்ததுடன், Electric Moon, In which Annie gives it those ones போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார் அருந்ததி. “நடிக்கும்போது, சற்று சங்கடமாக இருந்தாலும், பல ஆண்டுகள் கழித்து அந்தத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, என்னுடைய உண்மையான வீரிய சுபாவம் வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது'” என்று தன்னுடைய நடிப்பு அனுபவத்தைப் பற்றிச் சில இடங்களில் குறிப்பிடுகிறார்.

இந்தத் திரைப்படங்களைத் தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தின் சில தொலைக்காட்சி படங்களுக்கும் திரைக்கதை எழுதி, பல திரைப்பட விழாக்கள் மூலம் தனக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கினார் அருந்ததி.

1992ஆம் ஆண்டில் The God of Small things என்ற தன்னுடைய முதல் நாவலை எழுதத் தொடங்கினார். ஐந்தாண்டுகள் வரை தொடர்ந்து எழுதப்பட்ட இந்த நாவலில், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை மையமாக வைத்து அதனுடன் சமூகத்தில் பொதுவாக நடக்கும் சில விஷயங்களையும் சேர்த்து சமூக விழிப்புணர்வைக் கச்சிதமாக ஏற்படுத்தும் வகையில் அந்த நாவலை அமைத்தார். 1997ஆம் ஆண்டில் வெளியிட்ட பின், இந்த நாவல் உலகெங்கிலுமிருந்து பல பாராட்டுகளை அருந்ததிக்கு அள்ளித் தந்தது.

பாராட்டுகள் மட்டுமல்லாது, மேன் புக்கர் பரிசு என்ற பெரும் மரியாதையை இவருடைய நாவல் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

சமூகக் கருத்துகள், கட்டுரைகள்

முதல் நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்ததன் மூலம், அந்தப் பரிசை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அருந்ததியைச் சேர்ந்தது. சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து எழுதிய அந்த நாவலுக்குப் பிறகு, அருந்ததி மீண்டும் நான் பிக்ஷனுக்கு (புனைவு அல்லாத எழுத்து) திரும்பினார். பொது கட்டுரைகள், நாளிதழ்களில் அரசியல் சமூக விமர்சனக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்னைகளின்பால் தன்னுடைய முழு கவனத்தைச் செலுத்தி, சமூகப் பிரச்னைகள் சார்ந்து தன் குரலை எழுப்பினார்.

இந்தியாவின் அணு ஆயுத சோதனை, காஷ்மீர் விவகாரம், அமெரிக்கா மற்ற இஸ்லாமிய நாடுகளுடன் வைத்துக்கொள்ளும் போர், இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை அரசின் நடவடிக்கை போன்ற பல விஷயங்களைப் பற்றி தைரியமாகக் கருத்துகளைக் கூறிவருகிறார். அதிகாரத்தை எதிர்த்துக் கூர்மையான கேள்விகளை எழுப்புகிறார். புனைகதை எழுத்தாளர் என்பதோடு நிற்காமல், சமூக ஆர்வலர், விமர்சகர் என்ற பங்கினையும் இவர் ஆற்றிவருகிறார். குறிப்பாக, புக்கர் பரிசு தொகை மற்றும் தன்னுடைய கட்டுரை புத்தகங்களின் உரிமை தொகையைக் கொண்டு நர்மதா ஆற்றில் ஆறு அணைகள் கட்டுவதற்காக அருந்ததி உதவியது குறிப்பிடத்தக்கது.

கதை என்பதைப் பொழுதுபோக்கு விஷயமாகப் பார்க்காமல், அந்தக் கதைக்குள் வரலாறு மற்றும் சமூக சிந்தனைகளை இணைத்துப் படைக்கும் இவருடைய எழுத்துக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். கருத்து சுதந்திரம், கலை சுதந்திரம் ஆகியவை எளிதாகத் தட்டிப் பறிக்கப்படும் இன்றைய சூழலில், மனதில்பட்டத்தைப் பிரதிபலித்து அதை மக்களிடம் சரியான விதத்தில் கொண்டுசேர்ப்பதில் அருந்ததி காட்டும் சிரத்தையே அவரை இன்று உயரத்தில் வைத்துள்ளது.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 1

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 2

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 3

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 4

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 5

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 6

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 7

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 8

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 9

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 10

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 11

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 12

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 13

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 14

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 15

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 16

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 18

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 19

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 20

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 21

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon