மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

முதல்வரைப் போல செயல்படும் ஆளுநர்!

முதல்வரைப் போல செயல்படும் ஆளுநர்!

ஆளுநர் பன்வாரிலால் தமிழக முதல்வரைப் போல செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற நிலையில், கடந்த மாதம் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை சென்றார். அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர், தொடர்ந்து அரசு திட்டங்கள் குறித்து ஆய்வும் மேற்கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. தமிழகத்தில் இரட்டை ஆட்சிமுறை நடப்பதாகவும், இன்னொரு தலைமைச் செயலகமாக ராஜ்பவன் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.

தொடர்ந்து இதற்கு முன்புவரை ஆளுநருக்கு நிர்வாகச் செயலாளரே இருந்து வந்த நிலையில், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ராஜகோபால் ஆளுநரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத ஆளுநர் நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனது ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஒரு மாநிலத்தின் முதல்வரைப்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கோவையிலும் சரி, நெல்லையிலும் சரி இவர்தான் ஆட்சியை நடத்துகிறாரோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிற விதத்தில் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் இவ்வாறு செயல்படுவது தமிழக வரலாற்றிலேயே இதுவரை கிடையாது” என்று குற்றம்சாட்டிய வைகோ, “இது பேராபத்து. கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது. ஆளுநரின் இந்தப் போக்கால் தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றும் விமர்சனம் செய்தார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon