மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம் - 2

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம் - 2

த.நீதிராஜன்

இந்திய ஜனநாயகத்தின் மையம் எது?

சாதிய ஒடுக்குமுறை பற்றிய புரிதலில் கம்யூனிஸ இயக்கம் முன்னேறினாலும் இந்தியச் சமூகத்தின் சாதியக் கட்டுமானத்தை ஆராய்வதில் அது இன்னமும் போதுமான சாதனையைச் செய்யவில்லை. அதன் விளைவாக, தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுப் பிரிவினரில் ஒரு பகுதியினரை மட்டுமே பொதுவாக, கம்யூனிஸ்ட்களால் அணிதிரட்ட முடிந்தது. மேல்தட்டுப் பிரிவினரில் அர்ப்பணிப்பு மிக்க பலர் இருந்தாலும் அவர்களுக்கு இந்தியச் சமூகம் பற்றிய வர்க்க, சாதியப் புரிதல் போதுமான அளவுக்கு இல்லை.

தோழர் லெனின் தனது 29ஆவது வயதில் தன் முதல் புத்தகத்தை எழுதினார். ‘ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி’ என்னும் அந்த நூலில் அவர் மக்களின் எதிரி பற்றிய ஒட்டுமொத்தப் புரிதலை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தினார். அதுபோல இந்தியச் சமூகத்தில் உழைக்கும் மக்கள், முதலாளி வர்க்கம், சமூகத்தின் சாதிய மற்றும் வர்க்க அடுக்குகள் பற்றிய முழுப் புரிதலை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்த கம்யூனிஸ இயக்கம் தவறிவிட்டது. இதன் விளைவாக இந்தியச் சமூகத்தை இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தில் பார்க்கிற அடிப்படையான தவறைச் செய்தாக வேண்டிய நிலைக்குக் கம்யூனிஸ்ட்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனால் அவர்களால் தங்களது சொந்த வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்திக்கொள்ளவோ அணிதிரட்டிக்கொள்ளவோ முடியவில்லை. உழைக்கும் வர்க்கம் பற்றிய தட்டையான பார்வையை அவர்கள் அமைப்புரீதியாவும் சமூகரீதியாகவும் கொண்டிருந்தனர். அது இந்தியச் சமூகத்தின் மக்கள் குழுக்களின் மீது வரலாற்றுரீதியாகச் சுமத்தப்பட்டுள்ள சாதியச் சுரண்டலை அவர்களால் காண முடியாமல் செய்துவிட்டது அல்லது அவர்கள் காண்பதை மிகவும் தாமதமாக்கிவிட்டது.

உடைந்து நொறுங்கிய தொழிலாளி வர்க்கம்

தலித்துகள் (தலித் சாதிகளின் அடுக்கின் அடியில் உள்ள அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள் கையால் மலமள்ளும் இழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்), பழங்குடிகள் (பழங்குடிகளின் அடுக்கின் அடியில் தொல்குடிகள் உள்ளனர். அவர்கள் 10 ஆயிரம் ஆண்டுகள் பின்தங்கியுள்ளனர். விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலத்துக்கு முன்பாக இயற்கைப் பொருள்களைச் சேகரித்து வாழும் காலத்தில் தேங்கியுள்ளனர்), குற்றப் பரம்பரை என இழிவு சுமத்தப்பட்ட மக்கள் (ஒரு சிறு பகுதியினர் தங்களை விடுவித்துக்கொண்டு விட்டாலும் பெரும்பகுதியினர் இன்னும் இழிநிலையிலிருந்து மீளவில்லை) என இந்திய உழைக்கும் மக்களின் மிகமிகப் பெரும்பான்மையோர் பல்வகைச் சுரண்டல்களில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றனர். இதன் விளைவாக, இந்தியத் தொழிலாளி வர்க்கமே தன்னளவில் உடைந்து நொறுங்கியதாக உள்ளது. தான் இப்படி இருக்கிறோம் என்ற தன்னுணர்வும் அதற்கு இல்லை.

தனது உழைப்புக் கருவிகள் மூலமாகவோ அல்லது தனது அறிவுத்திறன் மூலமாகவோ மட்டுமே வாழ்பவர்கள் தொழிலாளிகள் என்பது பொதுவான வரையறை. இந்திய சாதியச் சமூகத்தில் தொழிலாளர்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்களாக இல்லை. இழப்பதற்கு அவர்களுக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. சாதியச் சமூகத்தின் சுரண்டலில் அவர்களும் பங்கு பெறுகிறார்கள். அதனால், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத் தன்மை பெரும்பாலும் கூலிக்கான போராட்டமாக இருக்கிறது. அதில் சமூக மாறுதலுக்கான தன்மையும் அரசியல் தன்மையும் குறைவாக உள்ளது.

பார்ப்பனிய ஒடுக்குமுறை

முதலாளித்துவமும் பார்ப்பனியமும் இந்திய மக்களின் எதிரிகள் என்று அம்பேத்கர் 1936இல் கூறியுள்ளார். பார்ப்பனியம் என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறைக் கருவியாக இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்படுகிறது.

சமூகக் களத்தில் பார்ப்பனியம் என்று அறியப்படுவது அரசியல் களத்தில் இந்துத்வா என அறியப்படுகிறது. ஆன்மிக - தத்துவக் களத்தில் சனாதன தர்மம் எனப்படுகிறது.

மார்க்ஸியத் தத்துவம் இந்திய சாதிச் சமூகத்துக்கு விடுத்த சவாலை சனாதன தர்மம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. சர்வதேச அளவில் மார்க்ஸியத்துக்கு எதிரான இயக்கத்தையும் அவர் தங்களின் செயல்திட்டத்தில் கொண்டுள்ளனர்.

மார்க்சிய சமத்துவத்துக்கு எதிராக சனாதன தர்மம் ‘ஒருங்கிணைந்த மனிதத்துவம்’ (Integral Humanism) என்ற சமூகத் தத்துவத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் இந்துத்வா முதல் சுற்றில் மார்க்சியத்தை முந்தியிருக்கிறது. தற்காலிக வெற்றியைப் பெற்றுள்ளது. சுதந்திர இந்தியாவின் நவீன சாதனைகள் அனைத்தையும் தின்று ஏப்பம் விடவும் சனாதன தர்மம் முயல்கிறது.

ரஷ்ய புரட்சியின் முன்பாக நின்ற முதலாளி வர்க்கம் அல்ல, இந்தியாவின் ஆளும் வர்க்கம். மார்க்சியத்தை வீழ்த்துவதற்கான உலகளாவிய மாற்றைத் தான் வைத்திருப்பதாக மார்தட்டும் சனாதன முதலாளி வர்க்கம் இது.

மார்க்சியத்தின் மையம் தலித்தியமே

ஒரு கூட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும்போது,“இந்துத்வாவின் மையம் பார்ப்பனிய” என்றார் தோழர் மைதிலி சிவராமன். இந்தத் தர்க்கத்தை நீட்டித்துக்கொண்டு சென்றால், மார்க்சியத்தின் மையம் தலித்தியம் என்னும் முடிவுக்கு நாம் வர இயலும்.

பார்ப்பனியம் என்ற சொல் சாதி கடந்து இருப்பது போலவே தலித்தியமும் சாதி கடந்ததே.

இந்திய அரசியல் சாசனம் உருவாகி நாடு குடியரசாக மாறிய நாள்களில் அம்பேத்கர், “ஜனநாயகத்தின் ஆனா, ஆவன்னா என்பது ஒரு மனிதர், ஒரு மதிப்பு என்ற நிலைதான். ஆனால், அது வெறும் பேப்பரில் மட்டும் இருக்கும். அரசியல் சாசனச் சட்டத்தில் இருக்கும். ஆனால், இந்தியச் சமூகத்தில் அந்த சமத்துவம் இருக்காது. இத்தகைய முரண்பாட்டுக்குள் நுழைகிறோம்” என்றார்.

சமூக நீதி ஜனநாயகம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்சம் அவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்பவாவது கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் கோரியவர் அம்பேத்கர் என்பது அவரைப் பற்றிய வெறும் சமூக நீதி சார்ந்த புரிதல் மட்டுமே.

இந்திய நாட்டின் மொத்த சமூகமும் வளங்களும் ‘இடம்’ என்பதாகக் கருதப்பட்டு அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பங்கிடுதல் நடக்க வேண்டும். முன்னேறிய சாதிகள், வர்க்கங்களின் வளர்ச்சி மட்டத்தின் உயரத்துக்கு ஒடுக்கப்பட்ட சாதிகளும் வர்க்கங்களும் உயர்த்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆற்றலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வகையான சமூக நீதி நடைமுறைகள் மூலம் உழைக்கும் மக்களுக்குத் தர வேண்டும் என்பதே அம்பேத்கரின் ஜனநாயகப் பார்வை.

இந்த வகை ஜனநாயகத்தை சமூகநீதி ஜனநாயகம் என்று அழைக்கலாம். இதுவே உண்மையான மக்கள் ஜனநாயகம்.

இந்திய ஜனநாயகத்தின் மையம் சமூக நீதியே. சமூக நீதி ஜனநாயகமே மக்கள் ஜனநாயகம் என்பதை உழைக்கும் மக்களின் வர்க்கப்போராட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பும் சாதி சமத்துவமும் சாதி ஒழிப்புமே இந்திய சோசலிஸத்துக்கான பாதை. இந்தப் பாதையில் வர்க்கப் புரிதலோடும் பாலினப் புரிதலோடும் பயணிப்பதே உண்மையான வர்க்கப் போராட்டம்.

அடையாளபூர்வமான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் மட்டுமல்ல, வாழ்வின் அனைத்துக் களங்களிலும் வர்க்கப் போராட்டம் வளர்ந்து விரிய வேண்டியதே எதிர்காலத்தின் தேவை.

இந்தியாவின் வர்க்கப் போராட்டக் களத்தில் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் அடையாளபூர்வமானவை என்ற வடிவத்திலிருந்து ஆழமானவை, வெல்லும்வரை தொடர்பவை என்ற வடிவத்துக்கு மாற வேண்டும்.

‘ஒரு பிரச்னைக்கு ஓர் அமைப்பு’ என்ற முறையில் அமைப்புகளின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.

தத்துவத்தின் மத்தியத்துவம்

சூரியன் தனது குடும்பத்தை ஈர்ப்பு விசையால் இயக்குவதைப் போல, இந்திய மார்க்சியம் தனது தத்துவக் கவர்ச்சியால் மட்டுமே அமைப்புகளை இயக்க வேண்டும்.

மத்தியத்துவம் அல்லது மையப்படுத்தப்பட்ட செயல்முறை இயல்பாக நடைபெற வேண்டும். அவ்வாறு இயலவில்லை என்றால் மத்தியத்துவத்தைக் கைவிட வேண்டும்.

மத்தியத்துவத்தின் வெற்றிடத்தை மார்க்சிய ஞானத்தின் ஆழம் நிரப்ப வேண்டும்.

ஜனநாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடு இடதுசாரி அமைப்புகளின் செயல்பாட்டை முடக்கிவிட்டது. தலைமைகளின் ஆதிக்கம் தனிநபர்களின் ஆதிக்கம் என்று மலிந்துவிட்டது. இது இடதுசாரிகளை தற்கொலைப்பாதைக்குத் தள்ளியிருக்கிறது.

முதலாளித்துவத்தின் முன்னேற்றமும் போராட்டமும் அவற்றின் உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழும்வரை காத்திருப்பது எனும் அணுகுமுறையை உழைக்கும் மக்கள் உடனடியாக மாற்ற வேண்டும். முதல் அடி கொடுக்கும் மனப்பான்மையை அனைத்துத் துறைக்கும் விரிக்க வேண்டும்.

இந்தியச் சமூகம் தனி வகையானது என்பதை ஏற்றுக்கொண்டு புதிய ஆற்றலோடு முன்னேறுவதுதான் நவம்பர் புரட்சியின் அனுபவத்தின் ஊடாக இந்திய உழைக்கும் மக்கள் கற்றுக்கொள்ளும் எதிர்காலப் பாடமாக இருக்கும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: த.நீதிராஜன், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர். தீக்கதிர், தி இந்து தமிழ் ஆகிய இதழ்களில் பணிபுரிந்தவர். சமூக மாற்றத்துக்கான களப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காய்தே மில்லத் சர்வதேச ஊடகவியல் கல்வி நிறுவனத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். ‘அணையா வெண்மணி’ என்னும் சமூக நீதிக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம்!

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon