மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழகம்?

கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழகம்?

‘ஒகி புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கன்னியாகுமரி செல்லாமல், ஆர்.கே.நகர் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் முக்கியமா?’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஒகி புயல் பாதிப்பிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளவில்லை; கடலுக்குச் சென்ற மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் தமிழகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்றவர்களின் குடும்பங்கள் நிர்கதிக்கு ஆளாகியுள்ளன. இறந்த மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது குடும்பத்துக்கான நிவாரணத் தொகையை கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால், புயலினால் பாதிப்புக்குள்ளான மீனவர்களின் எண்ணிக்கை மற்றும் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஒகி புயல் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

“பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக் கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு திகழ்கிறது. காணாமல்போன மீனவர்களை மீட்கும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கிவருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1,013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன மீனவர்கள் எந்தெந்த பகுதிகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களையும் ஜிபிஎஸ் கருவி மூலம் பெறப்பட்ட தகவல்களுடன் இணைத்து தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றின் உதவியுடன் மீனவர்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசும் இந்தியக் கடலோரக் காவல்படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளிடம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் புகார் அளித்தபோது, ‘மீனவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று ஜெபியுங்கள்’ என்று அவர்கள் கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒகி புயலால் தமிழகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டதோ, அதைவிட அதிகமாக கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி வருகிறார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுநரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதைவிட ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்வதுதான் முக்கியமா என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கேரளத்தில் ஒகிப் புயலில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.20 லட்சமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சேதமடைந்த படகுகளுக்குப் பதிலாக புதிய படகு என ஏராளமான சலுகைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை 36 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

அதோடு, “மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon