மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப்  வடிவேலு

பத்துப் பேருக்கு ஷேர் செய்யவும், தமிழனா இருந்தா ஷேர் செய்யவும், இன்னும் கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியும் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியாகி விட்டது. ஓரளவுக்கு மேல ஸ்பீட் ஆகல போலிருக்கு. நிறைய பேர் அனுப்பற மெசேஜ்லாம் நாம கண்டுக்கிறதே இல்ல. ஏன் சில மெசேஜ்லாம் நாம ஓப்பன் பண்றதே இல்ல. எனக்கே இன்னும் இன்பாக்ஸ்ல ஓப்பன் பண்ணாத மெசேஜ் மட்டுமே 3,547 இருக்கு. இதை டைப் பாண்ணி முடிக்கறதுக்குள்ள 3,600 வந்திருக்கும். சரி, இப்படி நாம கண்டுக்காமலே விட்டா... நம்மள தொடர்ச்சியா பார்க்க வைக்கிறதுக்கும் சில ஐடியா பண்ணி உணர்வுகள் தூண்டிவிடும் விதமாகவும் உட்கார்ந்து வேலை பார்க்கிறாங்க. அதுல ஒண்ணைப் பார்ப்போமா...

எப்போது படித்தாலும் இனியது

ஒரு கப்பலில் ஒரு தம்பதியர் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே படகு ஒன்று இருக்கிறது.

மனைவியை பின்னே தள்ளிவிட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.

கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச்செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார் என்று மாணவர்களை நோக்கி இந்தக் கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.

எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும்போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.

“ஏம்பா நீ சைலன்ட்டா இருக்க?”

“நம்ம கொழந்தையைப் பத்திரமா பார்த்துக்கங்கன்னு சொல்லியிருப்பா டீச்சர்.”

“எப்பிடிப்பா கரெக்டா சொல்ற... உனக்கு முன்னாடியே இந்தக் கதை தெரியுமா?”

“இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க.”

பலத்த மௌனத்துக்குப் பிறகு ஆசிரியை கதையைத் தொடர்ந்தார்.

தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.

தாய்க்கு உயிர்க்கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரியவந்தது.

கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.

“உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும். நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது.”

கதையை இதோடு முடித்துவிட்டு அந்த ஆசிரியை கூறினார்: “வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும். ஆனா, சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக் கூடாது.”

நாம சாப்பிட ரெஸ்ட்டாரென்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்தைவிட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்னு அர்த்தம்.

முதல்ல மன்னிப்பு கேட்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவை (Ego) விட உறவை மதிக்கிறாங்கனு அர்த்தம்.

நம்ம கண்டுக்காமவிட்டாலும் நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்.

பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்...

“யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்?”

ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம். அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை நாம கழிச்சிருக்கோம்னு.

#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது...

பார்த்தீங்களா... என்ன சொல்ல வராங்க கடைசியில, அனுப்பின மெசேஜ்லாம் பாருங்கடா.. அனுப்புற நாங்க ஒண்ணும் வெட்டிப்பய இல்ல... அப்படின்னு சொல்லாம சொல்றாங்க..

ஒரு மார்க்கமாத்தான் போயிட்டு இருக்கு வாட்ஸ்அப்பு.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon