மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

சிறப்புக் கட்டுரை: அறிவியல் - பெண்களின் ஆற்றல் பற்றி எலும்புகள் சொல்லும் ரகசியம்!

சிறப்புக் கட்டுரை: அறிவியல் - பெண்களின் ஆற்றல் பற்றி எலும்புகள் சொல்லும் ரகசியம்!

சைபர் சிம்மன்

பெண்கள் பலவீனமானவர்கள், கடினமான பணிகளைச் செய்வதற்கான உடல் வலிமை அவர்களுக்கு இல்லை எனும் கருத்து உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். குறிப்பாக, காலம் காலமாக பெண்கள் இப்படித்தான் இருந்துவருகின்றனர் என்ற எண்ணம் இருந்தால் அதை அழித்துவிடுங்கள். ஏனெனில், ஆய்வாளர்கள் வரலாற்று கால பெண்கள் பற்றிக் கண்டறிந்துள்ள விஷயங்கள் இத்தகைய அபிப்பராயங்களை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் அமைந்துள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், அதாவது 7,000 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் களத்தில் இறங்கிக் கடினமான வேலை செய்யும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதற்கேற்ற உடல் வலுவும் அவர்களுக்கு இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் காலத்தில் ஆண்களின் முக்கியப் பணி வேட்டையாடுவதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோலப் பெண்களின் பணி வீட்டு வேலையுடன் முடிந்து விடவில்லை. பெண்கள் நிலத்தைத் தோண்டுவது, உழுவது மற்றும் தானியங்களைச் சுமந்து வருவது உள்ளிட்ட பணிகளைச் செய்திருக்கின்றனர். அதாவது, விவசாய வேலைகள் முழுவதும் அவர்கள் வசம்தான் இருந்திருக்கின்றன.

அந்தக் காலத்து பெண்களின் கைகள் இந்தக் கடின வேலைகளை எல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தன. தற்காலத்துத் தடகள வீராங்கனைகள் மற்றும் படகு போட்டி வீராங்கனைகளின் கைகளுக்கு இருக்கும் வலுவும், ஆற்றலும் அவர்களுக்கு இருந்ததால் விவசாயப் பணிகளை எல்லாம் அநாயாசமாகச் செய்திருக்கின்றனர். சொல்லப்போனால் தற்கால வீராங்கனைகளைவிட ஆற்றல்மிக்கவர்களாக அந்தக் காலப் பெண்கள் இருந்துள்ளனர்.

ஆக, பெண்கள் பலவீனமானவர்களாகவே இருந்துவந்துள்ளனர் என்பது உண்மையில்லை என்பது ஆய்வின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

எலும்புகள் சொல்லும் உண்மை

எல்லாம் சரி, ஆய்வாளர்கள் எப்படி இந்த முடிவுக்கு வந்தனர்? எலும்புகளை வைத்துத்தான். ஆம், ஐரோப்பாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்களின் எலும்புக்கூடுகளை வைத்துத்தான் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர். எலும்புகளை வைத்து இதையெல்லாம் அறிய முடியுமா எனும் சந்தேகம் எழலாம். ஆனால், எலும்புகள் சொல்லக்கூடிய சேதிகளை எல்லாம் தெரிந்துகொண்டால் இந்த சந்தேகத்துக்கே இடமிருக்காது.

நாம் நினைப்பதற்கு மாறாக எலும்புகள் உயிருள்ள திசுக்களாகும். நமது உடலின் மற்ற பகுதிகள் போலவே அவையும் நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுகின்றன. ஒருவரது வாழ்க்கை முறை சோம்பல் மிக்கதாக இருந்தால், அவரது எலும்புகளை வைத்தே அதைக் கண்டுபிடித்துவிடலாம். அதே போலவே ஒருவர் ஓட்டப் பந்தய வீரரா, பளு தூக்குபவரா என்பதையும் எலும்புகளை வைத்தே கண்டறியலாம் என்கின்றனர்.

எலும்புகளின் வடிவம் மற்றும் அவை தாங்கியிருக்கும் அழுத்தம் ஆகிய விவரங்களைக்கொண்டு இவற்றை எல்லாம் ஊகித்துவிடலாம். மனித எலும்புகளின் அமைப்பு, அவற்றின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் அறிவியலுக்கு அத்துபடி என்பதால், ஓர் எலும்பின் அமைப்பைக் கொண்டே அதற்குரியவர் எத்தகைய வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார், என்ன விதமான வேலைகளைச் செய்தார், எந்த அளவு வலுக்கொண்டிருந்தார் என்றெல்லாம் சொல்லிவிடலாம்.

எலும்புகளின் ஏற்பட்ட மாற்றங்கள்

ஆதி கால மனிதர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தபோது அவர்கள் எலும்புகள் அதற்கேற்ற வகையில் இருந்தன. அதன்பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டு விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒப்பீட்டளவில் மந்தமான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்தபோது அவர்கள் எலும்புகளும் அதற்கேற்ப மாறின. 10,000 ஆண்டுகளுக்கு முன் இவை நிகழ்ந்தன. ஐரோப்பாவில் கி.மு.5,300 முதல் 1,000 ஆண்டுகள் வரை கிடைத்த எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவை அதற்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட நேராகவும், உறுதி குறைந்தும் காணப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கால் எலும்புகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளன.

ஆனால், இதே காலகட்டத்தில் பெண்கள் எலும்புகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் பெண்கள் வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் எலும்புகள் மாறவில்லை என கருதப்படுகிறது. ஆனால், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையைச் சேர்ந்த அலிசன் மேகிண்டாஷ் எனும் ஆய்வாளர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அந்தக் காலப் பெண்கள் ஆண்களைவிடக் குறைவாக வேலை செய்துள்ளனர் எனக் கருதுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதலாகும் என்கிறார் அவர். இதை நிரூபிப்பதற்காக அவர் வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட கால் மற்றும் கை எலும்புகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். இந்த எலும்புகளை முப்பரிமாண லேசர் வடிவமாக்கி அவற்றை தற்கால வீராங்கனைகளின் எலும்புகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வில் பெண்களின் கால் எலும்புகள் உறுதி குறைவானவையாக இருந்தாலும் கை எலும்புகள் ஆற்றலின் அடையாளத்தைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்காலத்துப் படகுப் போட்டி வீராங்கனைகளின் எலும்புகள் எந்த அளவு ஆற்றல்மிக்கவையோ அதைவிடப் பல மடங்கு ஆற்றல் அந்தக் காலப் பெண்களுக்கு இருந்திருக்க வேண்டும் என இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

பெண்கள் வீட்டு வேலையை மட்டும் செய்திருந்தால் இது சாத்தியம் இல்லை, அவர்கள் கடினமான விவசாய வேலைகள் அனைத்தையும் செய்திருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம் இது என்கிறார் ஆய்வை மேற்கொண்ட அலிசன். மண்ணைத் தோண்டுவது, கூடைகளைச் சுமப்பது, தானியங்களை அரைப்பது போன்ற பணிகளைப் பெண்கள்தான் செய்திருக்க வேண்டும் என்கிறார் அவர். ஆக, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பெண்கள் மிகவும் கடினமான வேலைகளைச் செய்திருக்கின்றனர். ஆண்கள் கால்களுக்கு வேலை அளிக்கும் வேட்டையாடுதல் மற்றும் ஓரளவு விவசாயப் பணிகளைச் செய்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

அதன் பிறகு பரிணாம வளர்ச்சி மாற்றம் காரணமாகப் பெண்களின் எலும்புகள் வலு குறைந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். மேலும் விரிவாக ஆய்வு செய்தால், அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் வேலைகளை எப்படி பகிர்ந்துகொண்டனர் என்பதை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்கிறார்.

பெரும்பாலும் சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால், தற்போது வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் முறையைப் புரிந்துகொள்ள இத்தகைய ஆய்வு அவசியம் என்கிறார். இஸ்ரேலைச் சேர்ந்த ஹிலா மே எனும் ஆய்வாளர் அலிசன் ஆய்வை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

*

ஆய்வுக் கட்டுரை செய்தியை வாசிக்க: http://www.sciencemag.org/news/2017/11/strong-women-did-lot-heavy-lifting-ancient-agrarian-societies

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon