மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தரம் தாழ்ந்த விமர்சனம்: மணிசங்கர் ஐயர் மன்னிப்பு!

தரம் தாழ்ந்த விமர்சனம்: மணிசங்கர் ஐயர் மன்னிப்பு!

பிரதமர் மோடி குறித்த தனது தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோரியுள்ளார்.

குஜராத் தேர்தல் பிரசாரம், தனி நபர்களைத் தாக்கிப் பேசும் பிரசாரமாகவே முடிந்துள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர், ‘பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. ஏன் அவர் இவ்வாறு கண்ணியமற்ற அரசியலில் ஈடுபடுகிறார்’ என்று விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி குறிப்பிடும்போது, “மணிசங்கர் ஐயரின் விமர்சனத்துக்கு குஜராத் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்” எனக் கூறினார்.

மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கூறினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியும், பாஜகவினரும் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸைப் பொறுத்தவரை வேறுபட்ட கலாசாரம், மரபில் வந்துள்ளோம். மணிசங்கர் ஐயரின் கருத்தை நான் ஏற்கவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனது கருத்துக்கு மணிசங்கர் ஐயர் நேற்று (டிசம்பர் 7) மன்னிப்பு கோரியுள்ளார். “நான் காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு பதவியிலும் நான் கிடையாது. எனவே, என்னால் பிரதமர் மோடிக்கு, அவருடைய பேச்சுக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தையின் மூலம் பதிலடி கொடுத்தேன். முதலில் என்னுடைய தாய்மொழி இந்தி கிடையாது. இந்தியில் பேசியபோது ஆங்கிலத்தை மனதில் வைத்துப் பேசிவிட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைக்கு வேறு அர்த்தங்கள் இருப்பின் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon