மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

கிச்சன் கீர்த்தனா - கடுகு குழம்பு!

கிச்சன் கீர்த்தனா - கடுகு குழம்பு!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவப் பொருள்களில், முதலிடம் கடுகுக்கு உண்டு. அதனால்தான், எல்லா குழம்புகளிலும் கடுகைத் தாளித்து சேர்க்கிறார்கள். கடுகில் அதிகம் உள்ள ஐசோதியோசயனேட் புற்றுநோய் உருவாக்கும் பொருள்களில் உள்ள நஞ்சை நீக்குகிறது. அது புற்றுநோய் செல்களைத் தடுத்து, குடல் - இரைப்பை தடத்தையும், குடல்வாலையும் பாதுகாத்து, புற்றுநோய்க்கு முட்டுக்கட்டை போடுகிறது. அவ்வப்போது கடுகைச் சமையலில் சேர்ப்பது வழக்கமானதுதான். ஒருநாள் கடுகையே முதன்மையாக வைத்தும் சமைக்கலாமே... வாருங்கள், கடுகு குழம்பு செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கடுகு - 40 கிராம், சீரகம் - 1 தேக்கரண்டி, மிளகு- 1 தேக்கரண்டி, பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி, மல்லி விதை - 50 கிராம், வெந்தயம் - அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - சிறிதளவு, புளி - எலுமிச்சையளவு, சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 15, நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. கடுகை சிவக்க வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

2. சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. வறுத்தவைகளுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த கலவையுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

5. நன்கு கொதித்துச் சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில், கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும். (கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக் கூடாது)

6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

குழம்பு சரியில்லைன்னாலும், மனைவி முகம் சுளிக்கக் கூடாதேன்னு நல்லாருக்குன்னு சொல்லிடலாம். ஆனா, அன்னிக்கே நல்லாருக்குன்னு சொன்னாரேன்னு இதேமாதிரி மோசமா, இன்னொரு நாளைக்கும் குழம்பு வரும். அதனால உண்மையே சிறந்தது # ஓர் இல்லத்தரசனின் அனுபவக் கதறல்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon