மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

விபத்தில் சிக்கிய புகழேந்தி

விபத்தில் சிக்கிய புகழேந்தி

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, நேற்று (டிசம்பர் 7) திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் – ஈபிஎஸ் வசம் சென்றபின்பும், தினகரன் ஆதரவாளர்களின் குரலில் பெரிதாக மாற்றம் இல்லை. அவர்களில் மிக முக்கியமானவர் பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி. சில மாதங்களுக்கு முன்பு வரை, பெங்களூரு அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர். தினகரன் ஆதரவாளர். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டபோதும், அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டபோதும், பெங்களூருவிலிருந்து குரல் கொடுத்தவர். சசிகலா உறவினர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை, ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரு அம்ருதா வழக்கு தொடுத்தது உட்பட சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் தினகரன் சார்பாக எதிர்வினையாற்றியவர்.

தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, நேற்று (டிசம்பர் 7) புகழேந்தி பெங்களூருவிலிருந்து திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலத்தில் வந்தபோது, அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில், அவரது இரு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மேல்சிகிச்சைக்காக அவர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon