மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை: கலெக்டர்!

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை: கலெக்டர்!

‘மதுரை மாவட்டம் இன்னும் மூன்று மாதங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்’ என ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செல்படுத்தியதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை விருது டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவுக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக நேற்று (டிசம்பர் 7) செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான திட்டங்களைத் தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தியதால் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மகளிர் சுயஉதவிக் குழு மூலமாகவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அரசின் திட்டங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் இதர துறைகள் மூலம் ரூ. 35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 14 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனபதிபதி விருது கிடைத்ததன் மூலம் மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும். அதேபோல், இன்னும் மூன்று மாதங்களில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுவரை மதுரைக்கு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு, மீனாட்சி அம்மன் கோயில் தூய்மைக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை விருது என்று மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon