மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.

ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும். உடலை வலுவாக வைத்துக்கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான்.

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யத் தொடங்குகின்றன. இதனால், ஊக்கம் பெறும் உடல் உறுப்புகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றன.

உடற்பயிற்சி செய்வதால் மனநலம் மிகவும் மேம்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உடற்பயிற்சி செய்வதால் நல்ல மனநிலையை உருவாக்கி, மனநலத்தைப் பாதுகாக்க முடியும். உங்களுடைய நாள் தொடங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு நாளும் இருக்கும் முந்தைய நாளின் மன அழுத்தத்தைக் களைந்து விட முடியும்.

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடங்களாவது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

நடைப்பயிற்சியினால் அதிக ரத்த அழுத்தம் குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.

தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். ரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு அகன்று போகும்.

அனைத்துக்கும் தற்போது மெஷின்களே வந்துவிட்டதாலும், மனிதர்களை சோம்பேறியாக்க எவ்வளவு விஷயங்கள் கொண்டுவர முடியுமோ அத்தனையும் கொண்டுவந்த வண்ணம் உள்ளது இன்றைய சமூகம்.

உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கவில்லை எனினும் நம்மால் முடிந்த வேலைகளை உடற்பயிற்சியாக நினைத்துசெய்து, உடலையும் மனதையும் வளமாக வைத்துக்கொள்வோம்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon