மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடி - திட்டமில்லாத பாஜக!

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடி - திட்டமில்லாத பாஜக!

ரந்தீப் சுர்ஜேவாலா

தற்போதைய காலகட்டத்தில், விவசாய நெருக்கடி மிகுதியாக உள்ளதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அண்மையில்கூட ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அணிவகுத்தனர். இந்த அணிவகுப்பில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த விவசாய சங்கங்களுடன் அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். மோடி அரசின் மோசமான முடிவுகள் மற்றும் சிந்தனைகளால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மோடி அரசின் இந்தச் செயல்பாடுகள் மற்ற அரசுகளுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு பாடமாக இருக்கும். ஆனால், இந்த அரசு தனது சொந்த கர்வத்தால் ஒரு மமதை நிலைக்குச் சென்றுள்ளது. எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரியாமல், இந்த அரசு மேற்கொண்ட வீரியமான முயற்சிகள் வீணாகியுள்ளன.

நாட்டில் விவசாயிகள் படும் எண்ணற்ற துன்பங்களைச் சுருக்கமாகச் சொல்வது முடியாத காரியம் என்றாலும், அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் பற்றியாவது நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். விவசாயிகள் தற்கொலை மிக ஆபத்தான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2014ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் தற்கொலை 40-46 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வேளாண் - பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையை வெளியிட்டதைத் (இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த அறிக்கை வெளியானது) தவிர, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க பாஜக அரசு வேறேதும் செய்யவில்லை. அந்த அறிக்கையில் முக்கியமாகக் காண வேண்டியது என்னவென்றால் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதுவே குஜராத்தின் முன்னாள் முதல்வராகவும், இந்நாள் இந்தியப் பிரதமராகவும் உள்ள மோடி அரசு விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டனர். குறிப்பாகத் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டவர்களின் எலும்புக் கூடுகளை எடுத்துவந்து போராட்டம் நடத்தினார்கள். பயிர்களுக்கான விலை வீழ்ச்சியைக் கண்டித்து அமைதியான வழியில் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்திய மான்சூர் விவசாயிகளின் மீது, அம்மாநில அரசு காவல் துறையை வைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக ஆறு பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழந்தை தனது தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டதையடுத்து டெல்லி சென்று ஆட்சியாளர்களிடம் முறையிடக் காத்திருந்ததாக நான் அறிந்தேன். ஆனால், ஓர் அரசு அதிகாரிகூட அந்தக் குழந்தையின் கோரிக்கை குறித்து கேட்கவே இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் கோரிக்கையை மற்றவர்களைவிட அவசரமாகவே முன்வைத்தனர். அவர்களுடைய உற்பத்திக்கான சந்தை விலை வீழ்ச்சியே அவர்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகளின் உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப வழங்குவோம் என்பது மோடி அரசின் 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய வாக்குறுதியாகும். ஆனால், அந்த அறிக்கைகள் எல்லாம் வெறும் கறுப்பு, வெள்ளை பக்கங்களாக மட்டுமே உள்ளன.

இவ்வாறு தொடர்ந்து இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான மனப்போக்கையே கொண்டுள்ளது. உதாரணமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஜி.எஸ்.டியில் டிராக்டர்கள் மற்றும் வேளாண் பொருள்களுக்கான வரி 12 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. மேலும், டயர்கள், டியூப்கள் போன்ற சில பொருள்களுக்கு 28 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரங்களுக்கான வரி 1.3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இந்த நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட ஓர் அதிகாரி கூட இல்லையா?

பாஜக அரசின் நடவடிக்கைகளில் அரசின் கொள்கை உருவாக்கத்துக்கும், மக்களின் வாழ்வியல் உண்மைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்பது உறுதிப்படுகிறது. இந்த வருடத்தில் 22.95 மில்லியன் டன் அளவிலான பருப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த எல்லா ஆண்டுகளை விடவும் அதிகமாகும். இதுவே உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும். ஆனால், பாஜக அரசு இதே காலகட்டத்தில் 6.6 மில்லியன் டன் பருப்பை இறக்குமதி செய்துள்ளது. அதுவும் இறக்குமதி வரி இல்லாமல். அதைப்போலவே கோதுமையும் 5.9 மில்லியன் டன் என்ற அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி திட்டமில்லாமல் செய்யப்பட்ட உணவுப்பொருள் விநியோக முறையால், உள்நாட்டு விவசாயம் மற்றும் உள்நாட்டுச் சந்தை என இரண்டுமே பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட கடுமையான விலை வீழ்ச்சியால் உள்நாட்டு விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் வெற்று சுலோகங்கள் காலாவதியாகிவிட்டன என்பதை அவர் உணர்ந்து விழிப்படைய வேண்டும். அவர்கள் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.4 சதவிகிதமாக இருக்க வேண்டும். இந்த வளர்ச்சியை எட்ட 6.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டுமென்று நிதி ஆயோக் கூறுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் வேளாண் துறை வளர்ச்சி 1.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இது மோடியின் ‘அச்சே தின்’ (நல்ல நாள்கள்) என்ற முழக்கத்தைப் போன்று ஒரு கானல் நீராகும்.

திறமைக்குறைபாடான பாஜக அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் எண்ணம் குறைவாகவே உள்ளது என்பது மட்டும் இதன்மூலம் நமக்குப் புரிகிறது.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon