மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

வாய்ப்பைப் பயன்படுத்திய சென்னை அணி!

வாய்ப்பைப் பயன்படுத்திய சென்னை அணி!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்றிரவு (டிசம்பர் 7) சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அதெலிடிகோ டி கொல்கத்தா அணியை சென்னை அணி எதிர்கொண்டது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சரிசமமாக விளையாடின. இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்காமல் தடுக்க முயற்சி செய்தனர். எனவே, பெரும்பாலும் கோல் முயற்சி முதல் பாதியில் கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வீரர் ஜீஜ் லேப்பிக்ஹுல முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். அவரைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் வீரர் ஜேகுன்ஹா 77ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் போட்டி டிரா ஆனது.

அதன் பின்னர் சென்னை அணியின் வீரர் இனிகோ காலடிரோன் 84ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். அவர் கோல் அடித்த 5 நிமிடத்துக்குள் கொல்கத்தா அணியின் வீரர் நின்ஷி குஹி இரண்டாவது கோல் அடித்து மீண்டும் போட்டியை டிரா செய்தார். போட்டி கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாகச் சென்றது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியே பயன்படுத்திய சென்னை வீரர் ஜீஜ் லேப்பிக்ஹுல மீண்டும் ஒரு கோல் அடித்தார். எனவே, சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon