மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

மாடலிங்கில் புரட்சிப் பெண்!

மாடலிங்கில் புரட்சிப் பெண்!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவராலும் ‘சாதனை’ என்பதை அவர்களது வாழ்நாளில் எந்தக் கட்டத்திலும் கண்டிப்பாக செய்ய முடியும். அதற்குத் தேவை விடாமுயற்சி, நம்பிக்கை என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளியான மகாலக்ஷ்மி மகாதேவ்.

சமூக வலைதளங்களில் பரவிவரும் ஒரு விளம்பர வீடியோ பலராலும் பகிரப்பட்டது. தொடக்கத்திலிருந்தே குளோஸ்-அப் ஷாட்களில் காட்டப்படும் மகாலக்ஷ்மி, விளம்பரத்தின் இறுதியில் வீல் சேரில் உட்கார்ந்திருப்பது தெரியவருகிறது.

போலியோ பாதிப்பினால் கால்களை இழந்த மகாலக்ஷ்மியை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான ஆடைகளை உருவாக்கும் ‘சுவஸ்தரா’ டிசைனிங் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளி ஒருவர் நடித்த முதல் விளம்பரப்படம் இதுவாக இருக்கும்.

மகாலக்ஷ்மியை இந்த விளம்பரத்தில் நடிக்கவைத்த சுவஸ்தரா நிறுவனத்தின் உரிமையாளர் ஷாலினி விசாகன் இதுகுறித்து என்டிடிவி-க்கு பேசியபோது “யாருமே இதைச் செய்யவில்லை என்று புகார் சொல்வதை விட்டுவிட்டு, நாமே அதைக் கையிலெடுத்து செய்வது சரி என்று களமிறங்கிவிட்டோம். மாடலிங் உலகில் இது ஒரு திருப்புமுனையாக அமையும்” என்று கூறியிருக்கிறார். ஷாலினியின் கணவர் விசாகன் ராஜேந்திரன் இதற்குப் பின்னால் இருந்து உதவியதாகவும் மேலும் இதுபோன்ற விளம்பரங்களை அதிகமாக உருவாக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

விளம்பரத்தில் நடித்தது குறித்து மகாலக்ஷ்மி யாராக இருந்தாலும் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. மாற்றுத்திறனாளியாக இருந்தால்மட்டும் இதில் விதிவிலக்கு ஏற்பட்டுவிடுமா? மனதில் உறுதி ஏற்று முயற்சித்தால் முடியாதது இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த விளம்பரத்தில் பணிபுரிந்த சிகை அலங்காரம் மற்றும் மேக்-அப் கலைஞர்கள் அனைவரும் பணம் வாங்காமல் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மகாலக்ஷ்மி நடித்த விளம்பரம்

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon