மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

பியூட்டி ப்ரியா - கருவளையம் நீங்க!

பியூட்டி ப்ரியா - கருவளையம் நீங்க!

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயின்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. சில நேரங்களில் உதடுகள்கூட. அவ்வளவு அலங்கார நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் இருப்பினும் கண்களின்கீழ் கருவளையம் முற்றிலும் அவ்வழகை கெடுத்துவிடும். சரியான நிறம் தேர்ந்தெடுக்காமலும் அளவுக்கதிகமாகவும் பூசப்படும் லிப்ஸ்டிக்காலும் முற்றிலுமாக அழகின்மையே காணப்படும்.

கண்களுக்குக் கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்துக்கு லேசான கறுப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாகச் சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையே கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவதுதான். அந்தச் சுருக்கமே கறுப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சத்துகள் இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட இதற்கு காரணம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருள்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். இப்பொழுதெல்லாம் இரவு 12 மணியைக் கடந்தும் மொபைல்போன்களைப் பயன்படுத்துவதால் ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் பாதிப்படைகின்றனர்.

நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்குக் காரணமாக அமையலாம்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கண்ணி கீரைகூட இதற்கு நல்லதுதான்.

இந்தக் காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.

இரவு அதிகநேரம் கண்விழித்தலே பெரும்பான்மையான பிரச்னைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பதால் கவனம்கொண்டு செயல்படுவோம்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon