மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

திருட்டுப் பயலே 2: அது வீடுதான்... ஆனா, வீடு இல்லை!- நாகு

 திருட்டுப் பயலே 2: அது வீடுதான்... ஆனா, வீடு இல்லை!- நாகு

ஒரு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முன்பாக காணாமல் போகக்கூடியவை சில இருக்கின்றன. அதிலும், திருட்டுப் பயலே 2 திரைப்படத்தை பேராதரவுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்கள், அதில் பயன்படுத்தியிருக்கும் கலை இயக்கத்தையும் பாராட்டியிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியும், தொடர்ந்து சினிமாவில் இயங்குவதற்கான புத்துணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அந்த புத்துணர்ச்சியுடன், திருட்டுப் பயலே 2 திரைப்படத்தில் வேலை செய்த அனுபவத்தை மின்னம்பலம் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. நான், திருட்டுப் பயலே 2 படத்தின் கலை இயக்குநர் நாகு.

உண்மையை அப்படியே சொல்வதென்றால், சுசி கணேசன் சாருடன் திருட்டுப் பயலே 2 படத்தில் கமிட் ஆனபோது மிகவும் பயமாக இருந்தது. என் குருநாதர் தோட்டா தரணி அவர்களுடன் பல படங்களில் வேலை செய்த அவருடன் எப்படி வேலை செய்யப்போகிறோம்? எப்படி அவரது வேகத்துக்கு ஓடப்போகிறோம் என்பது சந்தேகமாகவே இருந்தது. என் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் முதல் வேலையிலேயே ஒரு சூழல் ஏற்பட்டது.

படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரத்துக்கும் மூன்று விதமான அறைகளை ஒதுக்கி, அவர்களது கோட்டையாகவே அதனை மாற்றுவதென முடிவு செய்யப்பட்டது. பாபி சிம்ஹாவுக்கு அஃபீஷியல் அலுவலகம் ஒன்றையும், மறைவிடம் ஒன்றையும் உருவாக்கும் பணி முதலில் கையிலெடுக்கப்பட்டது. அதற்கு என்னென்ன பொருட்கள் எங்கிருக்கவேண்டும்? அவை எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு முழு தகவல்களையும் சுசி சார் கேட்டிருந்தார். திடப்படுத்திக்கொண்டு என்னிடமிருந்த தகவல்களையெல்லாம் அவருக்கு அனுப்பி வைத்தேன். அப்போது சில மாற்றங்களைச் சொன்னார். சரி, இப்படித்தான் இந்தப் படம் முழுவதும் வேலை செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டு ஒவ்வொரு செட்டுக்கும் அதேபோல அனுப்பியபோது அவர், ‘கடைசியாக என்ன வருமோ அதைக் காட்டுங்க நாகு’ என்று சொல்லிவிட்டார். அவரது இந்த வார்த்தை, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், பொறுப்பையும் கொடுத்தது. எனவே, ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்யவேண்டியவற்றை மிகவும் கவனத்துடன் எடுத்து செய்தேன்.

அமலா பால் கேரக்டரைப் பொறுத்தவரை, அவர் ஒரு மிடில்கிளாஸ் குடும்பப்பெண். வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பவர். இப்படியான சூழலில் வாழும் பெண்கள் பலருக்கு கைவினைப் பொருட்கள் செய்யும் திறமையும், அதற்கு பணம் செலவு செய்யாமல் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே அவற்றை செய்து பணத்தை சேமிக்கும் திறமையும் கைவந்த கலையாக இருக்கும். அமலா பால் கேரக்டரை இயக்குநர் இவ்வாறு வடிவமைத்திருந்தது படத்துக்கான கலைப் பொருட்களை வாங்கும் பட்ஜெட்டையும் குறைத்தது. புதிதாகவும், ரெடிமேடாகவும் பொருட்களை வாங்காமல், பல பொருட்களை நாங்களே டிசைன் செய்து அவரது வீட்டில் வைத்தோம். அப்படித் திட்டமிட்டுவிட்டு ஷூட்டிங்குக்கு ரெடியான போது உருவான பிரச்சினை அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்தது. கேமராவை நினைத்தபடி இயக்கமுடியவில்லை. அப்போது செட் போட்டுக்கொள்ளலாம் என்ற ஐடியாவை நான் தொடங்கிவைத்தேன்.

கையிலிருக்கும் பட்ஜெட்டை செட் மட்டுமே விழுங்கிவிட்டால் என்ன செய்வது என்று விவாதித்தோம். ஒவ்வொரு முறையும், செட்டைப் பிரித்து திரும்ப பொருத்துவதற்கான செலவு அதிகமாகும் என இறுதியாகக் கிடைத்த ரிசல்டை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்று யோசித்து, செட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்கரங்களை மாட்டிவிட்டோம். இது தேவைக்கேற்ப செட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் திறந்து, மூடி மாற்றிக்கொள்ள வசதியாக இருந்தது. இதையே ஒவ்வொரு செட்டுக்கும் செய்து பட்ஜெட் கையை மீறாமல் பார்த்துக்கொண்டோம்.

அமலா பால் வீட்டில் இப்படி என்றால், பிரசன்னாவின் வீடு இன்னும் பிரச்சினையானது. சின்ன இடத்தை நிரப்புவதற்கும், பெரிய இடத்தை நிரப்பாமல் அழகுபடுத்துவதற்குமான வித்தியாசம் தான் அந்தப் பிரச்சினை. பிரசன்னாவின் குணம், அவரது தொழில், ரசனை இவை அனைத்தையும் யோசித்து அந்த வீட்டுக்கு தேவையான பொருட்களை உத்தேசித்தோம். கிட்டத்தட்ட நான் தனியாக உட்கார்ந்து பிரசன்னாவின் கேரக்டருடன் விவாதமே நடத்தினேன். அப்போது தான் பிரசன்னாவின் ஒருபக்க செல்லரித்துப்போன கேரக்டரை அடிப்படையாக வைத்து ஒரு ஃபோட்டோவை உருவாக்கினோம். இதைப் பார்த்து பாராட்டிய இயக்குநர், இதைக் கண்டிப்பாக படத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். இது தான் சுசி சாரின் குணம்.

அவருக்குப் பிடித்துவிட்டால் எப்படியாவது அதைப் படத்தில் கொண்டுவந்துவிடுவார். ஆனால், அவருக்கு ஒன்றைப் பிடிக்கவைப்பது அத்தனை எளிதான காரியமல்ல. கலைநயம்மிக்க இயக்குநர் அவர். அவர் மனதில் ஒரு டார்கெட்டை உருவாக்கிக்கொள்வார். அதை நம்மிடம் சொல்லாமலே, அந்த லெவலுக்கு நாம் வரும்வரை நமக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார். முழுவதுமாக முடிந்தபிறகே அவர் சொன்னதன்மூலம் ஒரு செயலை நாம் எந்தளவுக்கு மாற்றி செய்திருக்கிறோம் என்பது தெரியும். இப்படியொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக நான் நன்றிசொல்ல நேரமில்லாத அளவுக்கு பாரட்டு மழையில் அவர் நனைந்துகொண்டிருக்கிறார். இதுபோலவே இன்னும் பல வெற்றிகள் பெறவேண்டும். அதில் எனது பங்கும் இருக்கவேண்டும்.

விளம்பர பகுதி

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon