மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

எடப்பாடி சீக்ரெட் மீட்டிங்!

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என வேட்டியை மடித்துக் கட்டாத குறையாகக் களமிறங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வர் பன்னீருடன் இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது சில அமைச்சர்களும் உடன் இருந்திருக்கிறார்கள். ‘ஆர்.கே.நகர் நமக்கு கௌரவப் பிரச்சினை. ஆளுங்கட்சிதான் எப்பவும் இடைத்தேர்தலில் ஜெயிக்கும். அதை நாம சரியாகப் பயன்படுத்திக்கணும். இப்போ நாம கோட்டை விட்டுட்டோம்னா அப்புறம் நமக்கு எதிர்காலமே இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. ஆளுங்கட்சியாக இருந்துட்டு அம்மா ஜெயிச்ச தொகுதியிலேயே ஜெயிக்க முடியலைன்னா மக்கள் நம் மேல அதிருப்தியில் இருக்காங்கன்னு முத்திரை குத்திடுவாங்க. அதனால, இந்த தேர்தல் நம் ஒவ்வொருத்தரோட எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தேர்தல் என்பதை மனசுல வெச்சு வேலை பார்க்கணும். நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை. நம்ம கூடவேதான் இருக்காங்க. அவங்களை சமாளிக்கிறதுதான் மிக முக்கியம். இதுக்கு முன்னாடி நம்ம கூட இருந்தவங்க இப்போ தினகரன் பக்கம் இருக்காங்க. அவங்களுக்கும் இந்தத் தொகுதி நல்லாவே தெரியும். நாம யாரை எங்கே எப்படி சந்திப்போம் என்பதையும் அவங்க தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. அதனால அதையெல்லாம் கவனமாகப் பார்க்கணும். போன முறை ஆர்.கே.நகரில் யாரெல்லாம் வேலை பார்த்தாங்க என்ற லிஸ்ட் ரெடி பண்ணனும். அதில், இப்போ யாரெல்லாம் தினகரன் பக்கம் இருக்காங்க என்று தனியா பிரிக்கணும். அப்படி இருக்கிற பகுதிகளுக்கு கூடுதலாக நாம கவனம் செலுத்தனும் . அதேபோல போன தடவை பன்னீர் அண்ணன் அணியில் இருந்தவங்க இப்போ நம்ம கூடத்தான் இருக்காங்க. அவங்க எந்த பகுதியில் வேலை பார்த்தாங்களோ அதே பகுதிக்கு அவங்களை நியமிக்கணும். புதுசா போய் தொகுதியை தெரிஞ்சுக்குறதைவிட, ஏற்கெனவே போன ஆட்களாக இருந்தால் சிக்கல் இருக்காது. அதனால அந்த லிஸ்டையும் கையில் வாங்கிட்டு டீம் ரெடி பண்ணனும். ஒவ்வொரு டீமும் அமைச்சர்களின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கணும். ஒவ்வொரு அமைச்சருக்கும் மூன்று அல்லது நான்கு டீம்னு பிரிச்சு கொடுத்துடலாம். அந்த டீம் தினமும் அமைச்சர்களுக்கு ரிப்போர்ட் செய்யணும். அமைச்சர்களுடன் நாம பேசிக்கலாம்' என்று சொல்லியிருக்கிறார் பழனிசாமி.

அதற்கு ஓ.பி.எஸ்., 'எல்லாம் சரிதான்... ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிர்வாகிகளை கூட்டிட்டு வர வேலையையும் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட ஒப்படைக்கணும். நிர்வாகிகளை சென்னைக்கு கூட்டிட்டு வரது, அவங்களை தங்க வைக்கிறது என எல்லா பொறுப்புகளையும் மாவட்டச் செயலாளர்கள் பார்த்துக்கணும். போன தடவை பல மாவட்டச் செயலாளர்கள் கண்டுக்கவே இல்லைன்னு புகார் வந்துச்சு. இந்த முறை அப்படி எதுவும் ஆகிடக் கூடாது. அதே போல பணம் கொடுக்கிறாங்க... அது இதுன்னு யாரும் எந்த புகாரிலும் மாட்டிக்க கூடாது. ரொம்பவும் உஷாரா இருக்கணும். இதுக்கு மாவட்டச் செயலாளர்களை உடனே கூட்டி ஒரு கூட்டம் போட்டு பேசிடுவோம். எல்லாமே சீக்கிரம் செஞ்சாகணும்..’ என்று சொன்னாராம்.

இப்படியாகப் பேச்சு தொடர்ந்திருக்கிறது. கடைசியாக தினகரன் பற்றி பேச்சு வந்திருக்கிறது. ‘தினகரன் விஷயத்தில் நாம அலட்சியமாக இருந்துட வேண்டாம். அவரால நம்மை நேரடியாக எதிர்க்க முடியலைன்னாலும் உள்ளடி வேலைகள் நிறைய பார்ப்பாரு. அதுல கவனமா இருக்க வேண்டியது அவசியம்...' என எடப்பாடியே சொன்னதாகச் சொல்கிறார்கள்" என்று முடிந்தது மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது. “விஷால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவர் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கப் போவதாக அறிவித்தார். தினகரன் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசினார்களாம். 'உங்க ஆதரவு எங்களுக்கு வேண்டும். தலைவர் உங்களைப் பார்க்க வர ரெடியாக இருக்காரு' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விஷால் தரப்பிலோ, ' ஏற்கெனவே அவர்தான் என்னைத் தேர்தலில் நிற்க வெச்சாருன்னு பேசுறாங்க. இப்போ நான் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிச்சா, ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சுட்டாங்கன்னு பேசுவாங்க... அதனால இதைப் பற்றி பேச வேண்டாம்' எனச் சொல்லப்பட்டுவிட்டதாம்" என்பதுதான் அந்த ஸ்டேட்ஸ்.

அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 7 டிச 2017

அடுத்ததுchevronRight icon