மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை!

தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ரமேஷுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டதால், தினகரன் புதிய சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் எடப்பாடி-பன்னீர் தரப்புக்குக் கிடைத்ததையடுத்து, நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக மதுசூதனன் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் தினகரன் புதிய கொடியுடன் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார்.

முன்பு நடைபெற்ற இடைத் தேர்தலில் தான் போட்டியிட்ட தொப்பி சின்னத்தை தனக்கு தர வேண்டும் என்று தினகரன் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்று கூறி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்.கே.நகரில் தொப்பி சின்னத்தைக் கேட்டு 29 பேர் விண்ணப்பம் செய்தனர்.

இடைத் தேர்தல் வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி மதுசூதனன், மருது கணேஷ், தினகரன் உள்ளிட்ட 58 வேட்பாளர்கள் தற்போது ஆர்.கே.நகரில் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே பெண் வேட்பாளர்.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுயேச்சைகளுக்கு குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொப்பி சின்னத்தைக் கேட்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளான நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை மனு அளித்திருந்தன. அதனடிப்படையில் நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ரமேஷுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தினகரன் வேறொரு சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

முன்னதாகச் சின்னம் குறித்துக் கருத்து தெரிவித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், "தொப்பி சின்னம் கிடைத்தால் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெறுவார். இது குறித்து உளவுத் துறை கூறிய தகவலின் அடிப்படையில்தான் தொப்பி சின்னத்தையும் வழங்கக் கூடாது என்று திட்டமிட்டுள்ளனர்" என்றார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon