மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஜெ. மரணம்: மருத்துவர் பாலாஜி விளக்கம்!

ஜெ. மரணம்: மருத்துவர் பாலாஜி விளக்கம்!

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை செய்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு, இன்று (டிசம்பர் 7) ஆஜராகி விளக்கமளித்தார் அரசு மருத்துவர் பாலாஜி. இந்த விசாரணை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் மேற்கொண்டுவருகிறது. கமிஷன் சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட 60 பேரும், நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த குழுவில் அரசு சார்பில் இடம்பெற்றிருந்த 5 மருத்துவர்களும் இதில் அடக்கம். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, அரசு மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ ஆகியோர் இதுவரை விளக்கமளித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 7) கமிஷன் முன்பு ஆஜாரானார் அரசு மருத்துவர் பாலாஜி. உடல் உறுப்பு தான சங்கத்தின் செயலாளராக, இவர் இருந்துவருகிறார். திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் ஜெயலலிதாவின் கைரேகைகளைப் பதிவு செய்தவர் இவர்தான்.

விசாரணை கமிஷனில் விளக்கமளித்தபோது, பல்வேறு விவரங்களை அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ”கைரேகைகளைப் பெற்றபோது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார். அப்போலோவில் அவருடன் சசிகலா மட்டுமே இருந்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மட்டுமல்லாமல், பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் இருந்தும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளிக்க வந்தனர்.

5 பேர் கொண்ட அரசு மருத்துவர் குழு ஜெயலலிதாவின் சிகிச்சையில் தலையிடவில்லை. நான் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்தேன். எய்ம்ஸ் மருத்துவர்களை நான் தான் ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். சிகிச்சை நடந்த நாட்களில், அமைச்சர்கள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை. லண்டன் சென்று சிகிச்சை பெற ஜெயலலிதா சம்மதிக்கவில்லை” என்று பாலாஜி விளக்கமளித்திருக்கிறார். இதனை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், டிசம்பர் 27ஆம் தேதியன்று பாலாஜி மீண்டும் கமிஷனில் ஆஜராவார் என்று தெரிகிறது.

கமிஷனில் விளக்கமளித்துவிட்டு காரில் ஏறிய மருத்துவர் பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். என்ன வைத்தியம் செய்யப்பட்டதோ, அதுபற்றி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறேன்” என்றார்.

இன்று, மற்றொரு அரசு மருத்துவரான தர்மராஜனும் விசாரணை கமிஷன் முன்பு விளக்கமளித்தார்.

இந்த நிலையில், இன்று ஜெயலலிதா கைரேகை வழக்கு தொடர்பாக, டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் இவர். ”ஏற்கனவே அளிக்கப்பட்ட ஜெயல்லிதாவின் 5 கைரேகை மாதிரிகள் தெளிவாக இல்லை. எனவே, வேட்பு மனுவில் இருந்த ஜெயலலிதாவின் அனைத்துக் கைரேகைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். 20 கைரேகைகளையும் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்” என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி ஆறுமுகசாமி முன்பு மருத்துவர் பாலாஜி விளக்கமளித்துள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணை மேலும் முக்கியத்துவத்தைப் பெறும் என்று தெரிகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon