மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வேகமெடுக்கும் நித்தியானந்தா பாலியல் வழக்கு!

வேகமெடுக்கும் நித்தியானந்தா பாலியல் வழக்கு!

நித்தியானந்தா மூலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனக் கூறி லெனின் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். நவம்பர் 27 2010இல் இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டில் கூடுதல் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

2014 ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை ஆகியவை நடைபெற்றன. இதன் அடிப்படையில் கர்நாடக சிஐடி போலீசார் இறுதிக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு அருகேயுள்ள ராம்நகர் 2ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் ஒரு 6 வயதுக் குழந்தை என்றும் தன்னால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முடியாது என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இதற்கு ஆதாரமாக, டில்லி தனியார் மருத்துவமனை ஒன்றின் சோதனை அறிக்கையையும் அவர் தாக்கல் செய்திருந்தார். மேலும் நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யுமாறு கூறியிருந்தார். நித்தியானந்தா ஒரு நிரபராதி என்று நடிகை ரஞ்சிதா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் லெனின் மற்றும் கர்நாடக சிஐடி பிரிவு போலீசார் இந்தக் கருத்துக்களை ரத்து செய்யக்கோரி கடந்த 2015ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எனினும் இது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்றும் குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அறிவுறுத்தியது. மேலும், வழக்கு விசாரணை தொடங்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர், தான் தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்க முடியாது என்ற தெரிவித்த நீதிமன்றம், விசாரணை தொடங்கிய பின்னர் நீதிமன்றம் விரும்பினால் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடாத ஆவணங்களைப் பரிசோதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்குத் தொடுத்த லெனினை நாம் தொடர்புகொண்டபோது, “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon